

இ-காமர்ஸ் சந்தை அடுத்த ஐந்து வருடங்களில் 10,000 கோடி டாலரை எட்டும் என்று பிக்கி (FICCI) மற்றும் கன்சல்டன்ஸி நிறுவனமான கேபிஎம்ஜி வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் இணைய பயன்பாடு அதிகரிப்பு, ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை பெருகி வருவது, டிஜிட்டல் நெட்வொர்க் அதிகமாக பரவி வருவது போன்ற காரணங்களால் இந்த தொகையை எட்டும் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
தற்போது இந்தியாவில் இ-காமர்ஸ் துறை 1,000 கோடி அமெரிக்க டாலர் அதாவது ரூ. 65,000 கோடியை எட்டியுள்ளது. கிராமப் புறங்களில் டிஜிட்டல் நெட்வொர்க் பரவி வருவதால் அடுத்த பத்து வருடங்களில் இதன் வளர்ச்சி 25,000 கோடி டாலரை எட்டும்.
இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசிய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளர் அமிதாப் காந்த் கூறியதாவது;
2020-ம் ஆண்டிற்குள் இ-காமர்ஸ் துறை 10,000 அமெரிக்க டாலரை எட்டும். தற்போது சீனாவில் இ-காமர்ஸ் சந்தை 45,000 டாலரை எட்டியுள்ளது. ஆனால் இந்தியாவில் 1,000 டாலர் மட்டுமே வளர்ச்சி கண்டிருக்கிறது.
இந்தியாவில் இ-காமர்ஸ் தற் போது வளர்ந்து வருகிறது. 2017-ல் 50 கோடி இந்தியர்கள் இன்டர்நெட் சேவையோடு தொடர்பில் இருப் பார்கள். இது அதிக அளவில் நுகர்வோர் வாய்ப்புக்களை உருவாக்கும். 2030-ம் ஆண்டிற்குள் 35 கோடி மக்கள் கிராம புறத்திலிருந்து நகரங்களுக்கு குடி பெயர்வார்கள். இது 2050-ல் 70 கோடியாக உயரும். 2025-ல் இந்தியாவின் 50 சதவீத பொருளாதாரத்தை இந்திய நடுத்தர வர்க்கத்தினர் இயக்குவார்கள் என்று காந்த் கூறினார்.
இ-காமர்ஸ் புகார்
இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக 12 புகார்களை அரசு பெற்றுக்கொண்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் நியூலுக் ரீடெய்ல்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் கடந்த 3 வருடங்களாக பண மோசடி, மோசடியான பண பறிமாற்றங்களில் ஈடுபட்டதாக மாநிலங்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், கார்ப்பரேட் துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி கடந்த 3 வருடங்களில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக இதுவரை 12 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் மூன்று புகார்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மேலும், நியூலுக் நிறுவனத்தின் மீது 7 புகார்களும் பெறப்பட்டுள்ளன என்று கூறினார்.