Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

இறக்குமதி செய்யும் கரோனா மருந்துகளுக்கு ஐஜிஎஸ்டி விலக்கு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 43-வது கூட்டம் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்றது.

முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு இக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பு மருந்து இலவசமாக இறக்குமதி செய்யப்பட்டால் அவற்றுக்கு ஐஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது. மேலும், அம்போடெரிசின்பி மருந்து (கருப்பு பூஞ்சை நோய்க்கு இது அளிக்கப்படுகிறது) உள்ளிட்டவை இலவசமாக அளிப்பதற்கு அரசுக்கோ அல்லது தனியாருக்கோ இறக்குமதி செய்யப்பட்டால் அதன் மீது ஐஜிஎஸ்டி முழுமையாக விலக்கு அளிக்கப்படும். ஆகஸ்ட் 31 வரை இந்த சலுகை தொடரும். தாமதமாக வரி தாக்கல்செய்வோர் மீது அபராத வரிக்குப்பதிலாக ஒரு சலுகை திட்டம் அறிவிப்பது குறித்து பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி நிலுவையில் உள்ள வரி தாக்கல் படிவங்களை சிறிய தொழில் நிறுவனங்கள் தாக்கல் செய்யலாம். கரோனா தடுப்பு சார்ந்த மருந்துகள், கருவிகள் மீதான வரி விதிப்பு குறித்த பரிந்துரைகளை ஜூன் 8-ம் தேதி அமைச்சரவை குழு கூடி முடிவு செய்யும். மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1.58 லட்சம் கோடி. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறை, இந்த ஆண்டும் பின்பற்றப்படும். அடுத்த 2022 ஜூலைக்குப் பிறகு இழப்பீடு செஸ் வழங்குவது குறித்து சிறப்பு ஜிஎஸ்டி கூட்டம் நடத்தப்படும்.

கரோனா தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு, மாநிலங்களுக்கு இலவசமாக அளிக்கிறது. மொத்த உற்பத்தியில் 50 சதவீதம் இவ்விதம் அளிக்கப்படுகிறது. 25 சதவீதம் மாநில மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுகிறது. எஞ்சிய 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அளவு எந்த சூழலிலும் குறைக்கப்படவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x