

11 சிமென்ட் நிறுவனங்களுக்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) 6,316 கோடி ரூபாயை அபராதமாக விதித்தது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் கூட்டு சேர்ந்து விலையை நிர்ணயம் செய்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை போட்டி ஒழுங்குமுறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்திருக்கிறது.
கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சிமென்ட் நிறுவனங்கள் மேல் முறையீடு செய்திருந்தன. அபராதம் விதித்தவுடன் அனைத்து சிமென்ட் நிறுவனங்களும் அபராத தொகையில் 10 சதவீதத்தை சிசிஐயிடம் செலுத்தின. மேல்முறையீட்டின் தீர்ப்பில் இந்த தொகையையும் சிமென்ட் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிசிஐ மூன்று மாதத்துக்குள் புதிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.
ஏசிசி, அம்புஜா சிமென்ட்ஸ், பியானி சிமென்ட்ஸ், சென்சூரி டெக்ஸ்டைல்ஸ், இந்தியா சிமென்ட்ஸ், ஜேகே சிமென்ட்ஸ், லாபார்ஜ் இந்தியா, மெட்ராஸ் சிமென்ட்ஸ், அல்ட்ரா டெக், ஜேபி அசோசியேட்ஸ் மற்றும் சிமென்ட்ஸ் ஆகிய 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
கட்டுமான நிறுவன சங்கங்கள் அளித்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிசிஐ விசாரணை நடத்தி சிமென்ட் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது. இந்த அமைப்பு 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது புகாரினை பதிவு செய்தது. இதில் சிமென்ட் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் 11 நிறுவனங்கள் ஒன்றாக கூட்டு சேர்ந்து உற்பத்தியை அதிகரிக்காமல் உள்ளனர். இந்த நிறுவனங்களின் உற்பத்தி திறன் அளவுக்கு சிமென்ட் உற்பத்தி இல்லை. இதனால் சிமென்ட் விலை அதிகரித்துள்ளது, இதனால் கட்டுமான நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாதிப்படைகிறார்கள் என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சிசிஐ தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்களும் 6,319 கோடி ரூபாயை அபராதமாக விதித்தனர்.
மேல்முறையீட்டில் யார் விசாரணை செய்கிறார்களோ அவர்களே முடிவெடுக்க முடியும். ஆனால் பிப்ரவரி 21-23 ஆகிய நாட்களில் சிசிஐ தலைவர் எங்களுடைய வாதத்தை கேட்கவில்லை. அவருக்கு இது குறித்து எதுவும் தெரியாத போது எப்படி முடிவெடுக்க முடியும் என்ற வாதத்தை சிமென்ட் நிறுவனங்கள் கூற அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது.
அபராதம் தள்ளுபடி குறித்து மூன்று மாதத்துக்குள் புதிய உத்தரவினை சிசிஐ பிறப்பிக்க வேண்டும். தவிர, புலானாய்வுகளுக்கு தகுந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டிய நேரம் இது என்று தீர்பாயம் தனது மேல்முறையீட்டு தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும் சிமெண்ட் நிறுவனங்கள் சார்பான வாதத்தை போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் (சிசிஐ) தலைவர் கவனிக்காமல் 2012-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறார் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.
போட்டி ஒழுங்குமுறை தீர்பாயம் வழங்கியுள்ள தீர்ப்புகளில், அதிகபட்ச அபராதம் வழங்கியது சிமென்ட் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் என்பது குறிப்பிடத்தக்கது.
சிமென்ட் நிறுவனங்களுக்கு சாதகமாக வர்த்தகத்தின் தொடக்கத்தில் சிமென்ட் துறை பங்குகள் உயர்ந்தன.