

தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போல், காளைகளோடு மோதும் விளையாட்டுக்கு பிரபலமான நாடு.
ஸ்பெயின் என்னும் பெயர் “இஸ்பானியா” (Ispania) என்னும் வார்த்தையிலிருந்து வருகிறது. முயல்கள் நாடு என்று அர்த்தம்.
உலகில் அதிக மக்கள் பேசும் மொழி சீனம். இந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ் உள்ளன.
பூகோள அமைப்பு
நிலப்பரப்பு 5,05,370 சதுர கிலோமீட்டர்கள். அண்டைய நாடுகள் அன்டோரா (Andorra), பிரான்ஸ், ஜிப்ரால்ட்டர் (Gibraltar), போர்ச்சுக்கல், மொராக்கோ.
கரி, லிக்னைட், இரும்பு, செம்பு, ஈயம், துத்தநாகம், டங்ஸ்டன், யுரேனியம், பாதரசம், ஜிப்ஸம் போன்ற இயற்கைச் செல்வங்கள் நிறைந்த நாடு. விவசாயத்துக்கு ஏற்ற பொன் விளையும் பூமி. தலைநகரம் மாட்ரிட்.
சுருக்க வரலாறு
கி.மு. 1100 களிலேயே நாகரிக வளர்ச்சி கண்டிருந்த நாடு. கி.மு. 2 ஆம் நூற்றாண்டில், ரோம சாம்ராஜியத்தால் வெல்லப்பட்டு, 600 ஆண்டுகள் ரோமானியர் கீழ் இருந்தது. அதற்குப்பின், ரோமாபுரியின் பல பகுதிகளில் இருந்த, மூர்கள் (Moors) என்னும் இசுலாமிய மன்னர்களின் ஆட்சி. கி. பி. 1212 ல், கிறிஸ்தவ மன்னர்கள் அரியணையைப் பிடித்தார்கள். இவர்கள் ஆட்சியில்தான், 1492 இல், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். 15, 16, 17 ம் நூற்றாண்டுகளில், அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவில் ஏராள நாடுகளைப் பிடித்து, மகா வல்லரசானது. உலக மக்கள் தொகையில் எட்டில் ஒருவர் ஸ்பானிஷ் பிரஜையாக இருக்குமளவு வளர்ச்சி! 1800, 1900 களில் பல நாடுகளை இழந்தது. 1931 இல், மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்தது.
1936 ல் ஜெனரல் ஃப்ராங்க்கோ (General Franco) ராணுவ ஆட்சி அமைத்தார். 39 வருடங்கள் அவர் மரணம் வரை எதேச்சாதிகாரம்தான். 1977 ல், தேர்தல் நடந்து மறுபடியும் மக்களாட்சி தொடர்கிறது.
மக்கள் தொகை
4 கோடி 77 லட்சம். ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் 94 சதவீதம். மற்றவர்கள் பிறர்.
ஆண்கள் கல்வியறிவு 99 சதவீதம். பெண்கள் 97 சதவீதம். பேசும் மொழி ஸ்பானிஷ். ஆங்கில அறிவு அதிகமில்லை.
ஆட்சிமுறை
மன்னராட்சியும், மக்களாட்சியும் சேர்ந்த கலவை. நாட்டுத் தலைவர் மகாராஜா / மகாராணி. வம்சாவளியாக இந்தப் பதவி வருகிறது. இரு சபைகள் செனட் என்னும் மேல் சபை. பிரதிநிதிகள் சபை என்கிற என்னும் கீழ் சபை (House of Deputies). மேல்சபை அங்கத்தினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கீழ்சபை அங்கத்தினர்கள் பிரதிநிதித்துவ முறைப்படி மக்களால், தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 18 வயதான அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. ஆட்சி நடத்துபவர் பிரசிடெண்ட். பிற நாடுகளின் பிரதமர் பதவிக்கு ஒப்பானது.
பொருளாதாரம்
சேவைத் துறை முக்கிய இடம் பிடித்திருக்கிறது - 71 சதவீதம். சுற்றுலா இதில் தனியிடம் பிடிக்கிறது. பழங்கால அரண்மனைகள், மாளிகைகள், காளை விளையாட்டு ஆகியவற்றைப் பார்க்க, நான்கரைக் கோடி அயல்நாட்டவர் ஒவ்வொரு வருடமும் வருகிறார்கள். தொழில் துறையின் பங்கு 26 சதவீதம். தொழில் தொடங்குவதற்கான கட்டமைப்பில், உலகில் பத்தாம் இடம் வகிக்கிறது, கார்கள், ஜவுளிகள், காலணிகள், உலோகங்கள், மருந்துகள் போன்றவை முக்கிய தொழில்கள். விவசாயம் வெறும் 3 சதவீதம்தான்.
2008 இல் வந்த உலகளாவிய நிதிப் பிரச்சினையால், பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. 2014 முதல் முன்னேற்றம் காட்டுகிறது.
நாணயம்
ஐரோப்பிய யூனியனின் பொதுக் கரன்சியான யூரோ. சுமார் 71 ரூபாய்க்குச் சமம்.
இந்தியாவோடு வியாபாரம்
ஸ்பெயினுக்கு நம் ஏற்றுமதி 19,250 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை ஆடைகள், காலணிகள், ரசாயனம், மீன். நம் இறக்குமதி 12,282 கோடிகள். பெட்ரோல், பிளாஸ்டிக்ஸ், தோல் பதனிடும் ரசாயனங்கள் ஆகியவை இவற்றுள் முக்கியமானவை. இருவரின் அயல்நாட்டு வர்த்தகத்திலும், மற்றவர் பங்கு ஒரு சதவீதமே. இதனால், தொழிலை வளர்க்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.
பயணம்
நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களிலும் கடுமையான குளிர். ஜூலை, ஆகஸ்ட் பலரும் விடுமுறை எடுக்கும் காலம். இந்த மாதங்களைத் தவிருங்கள்.
பிசினஸ் டிப்ஸ்
நேரம் தவறாமை மிக முக்கியம். ஆனால், அவர்கள் பெரும்பாலும் தாமதமாகத்தான் வருவார்கள். அப்பாயின்மென்ட் இருந்தால்தான், யாரையும் சந்திக்கமுடியும். சாதாரண மாக மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போவார்கள். ஆகவே மதிய உணவு சந்திப்புகள் நடக்கும் வாய்ப்புகள் குறைவு. அதேபோல், காலை 8 மணிக்கு முன் சந்திப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. விசிட்டிங் கார்டுகள் அவசியம். இவை ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறு பக்கம் ஸ்பானிஷ் மொழியிலும் இருக்கவேண்டும். உள்ளூர் ஏஜென் டுகள் தேவை. ஆங்கில அறிவு குறைவு, மொழி பெயர்ப்பாளர்கள் வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, பேச்சு வார்த்தைகள் வேகமாகவும், சுமுகமாகவும் நடக்க இவர்கள் உதவி தேவை.
கை குலுக்கல்தான் சாதாரண வரவேற்பு முறை. நெருங்கிப் பழகுபவர் கள் மட்டுமே முதுகில் தட்டுவார்கள், அணைத்துக் கொள்வார்கள். வெறும் பெயர் சொல்லிக் கூப்பிடக்கூடாது. Mr, Miss, Mrs சேர்த்து அழைக்கவேண்டும்.
கண்களைப் பார்த்தபடி பேசுவார்கள். சில செயல்கள் அநாகரிகம்:
கட்டை விரலையும், சுட்டு விரலை யும் சேர்த்து வட்டமாக்கிக் காட்டும் “ஓக்கே.”
பாக்கெடுகளில் கைகளை வைத்துக் கொண்டு பேசுதல். பொது இடங்களிலும், பேச்சு வார்த்தைகளின் போதும், தலை சீவுவது, பவுடர் மற்றும் பிற மேக்கப் போடுவது. அவசர முடிவுகள் எடுக்கமாட்டார்கள். எடுக்கும் முடிவுகளும் அடிக்கடி மாறலாம், பொறுமை தேவை.
அரசியல், விளையாட்டு, சுற்றுலா பற்றிப் பேசலாம். மதம் பற்றிப் பேசுவது, காளை விளையாட்டைக் கேலி செய்வது ஆகியவை கூடவே கூடாது. மாலை 5 முதல் 6 வரை ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள். இரவுச் சாப்பாடு எட்டு மணிக்கு மேல்தான். ஆடம்பரமான உணவகங்களில் சுவையான உணவையும், ஒயினையும் ரசிப்பார்கள். வீடுகளுக்கு அழைப்பது அபூர்வம்.
உடைகள்
ரசனையோடு ஆடைகள் அணி வார்கள். உடைகளின் அடிப்படையில் உங்களை எடை போடுவார்கள். கோட், சூட் அவசியமில்லை. ஆனால், ஸ்மார்ட்டாகத் தோற்றம் தருவதை எதிர்பார்க்கிறார்கள்.
பரிசுகள் தருதல்
பரிசுகள் தந்தால், உங்கள் கண் முன்னாலேயே திறந்து பார்ப்பார் கள். பாராட்டுவார்கள். பரிசுகள் பெறும் போது, நீங்களும் இப்படியேதான் செய்யவேண்டும்.
slvmoorthy@gmail.com