Published : 26 May 2021 05:22 PM
Last Updated : 26 May 2021 05:22 PM

தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்காக இலவச டிராக்டர் வாடகை திட்டம்: டஃபே நிறுவனம் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

டஃபே நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்காக, டஃபே நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பங்களிப்பின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.

இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"உலகின் மூன்றாவது மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பாளரும், அமால்கமேசன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமுமான, டஃபே நிறுவனம் (டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட்) கோவிட் பெருந்தொற்றின் இந்த இரண்டாவது அலை காலகட்டத்தில், தமிழக அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் நோக்கில், தற்போதைய சாகுபடி காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்காக இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க தமிழக அரசுக்கு நிதியுதவி செய்துள்ள டஃபே, தமிழக அரசின் பரவலான நோய்த் தடுப்பு திட்டத்திற்கும் உதவி செய்யும். கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்காக டஃபேவின் மேற்கூறிய ஒட்டுமொத்தப் பங்களிப்பின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.

இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள சுமார் 50,000 விவசாயிகளின் 1,20,000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இத்திட்டம் 2021 மே மாதம் முதல் 2021 ஜூலை வரை மாநிலம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள 2 ஏக்கர் அல்லது 2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய விவசாயிகளின் நலனுக்கான இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டத்திற்காக, டஃபே நிறுவனம் தனது 16,500 மேஸி ஃபெர்குசன் மற்றும் ஐஷர் டிராக்டர்கள் (Massey Ferguson and Eicher tractors) மற்றும் 26,800 வேளாண் சாதனங்களை (implements) வழங்குகிறது.

தமிழக அரசின் உழவன் செயலியில் (Uzhavan app) உள்ள ஜேஃபார்ம் சர்வீசஸின் டிஜிட்டல் செயல்தளத்தின் வழியாகவோ அல்லது கட்டணமில்லாத உதவி எண் 1800-4200-100 வழியாகவோ விவசாயிகள் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது வாடகைக்கு வழங்கலாம்.

தமிழ்நாடு அரசின் வேளாண்துறை மற்றும் அத்துறையின் மாவட்ட அதிகாரிகளின் ஆதரவோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

டஃபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன் கூறுகையில், 'தமிழ்நாடு அரசின் ஊக்குவிப்பு மற்றும் ஆதரவோடு தமிழ்நாட்டின் சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்காக இலவச வாடகை டிராக்டர் திட்டத்தை அளிப்பதில் டஃபே மகிழ்ச்சி அடைகிறது.

இந்த இக்கட்டான சூழலின், தற்போதைய சாகுபடி காலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெரிதும் பயன்படும் வகையில், டஃபே தனது மேஸி ஃபெர்குசன் மற்றும் ஐஷர் டிராக்டர்களுடன் பிற வேளாண் சாதனங்களையும் இத்திட்டத்திற்காக வழங்குகிறது.

விவிசாயிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வருக்கும், இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டத்தைச் செயல்படுத்த உதவிய வேளாண்துறை அமைச்சருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று கூறினார்".

இவ்வாறு டஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x