

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 8.1 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தன்னுடைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது. மத்திய கால பொருளாதார ஆய்வில் வளர்ச்சி விகிதம் குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. பருவமழை பற்றாக்குறை காரணமாக விவசாய உற்பத்தி குறையும், அதனால் வளர்ச்சி விகிதம் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது.
நடப்பு நிதி ஆண்டில் 7.4 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று ரிசர்வ் வங்கியும் ஏற்கெனவே கணித்திருக்கிறது. சில்லரை பணவீக்கம் ஆறு சதவீதமாக இருக்கும். வளர்ச்சி விகிதத்தில் குறைவு ஏற்பட்டிருப்பதால், நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கான 3.9 சதவீததை எட்டுவதில் சிரமம் இருக்கக்கூடும். தவிர பங்குவிலக்கல் மூலம் நிதி திரட்ட நிர்ணயம் செய்த இலக்கை அடைவதில் சிக்கல் உள்ளது. பங்குச்சந்தை சூழல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது. இதனால் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவது சவாலாக இருக்கும். எதிர்பார்க்கப்பட்டதை விட 0.2 சதவீதம் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். தவிர ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளும் நெருக்கடி தரும்.
நேர்முக வரிகளைவிட மறைமுக வரி வசூல் அதிகமாக இருக்கிறது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் குறைவாக இருப்பதால் கூட நேர்முக வரிகள் குறைந்திருக்கலாம். ஜிடிபி வளர்ச்சி குறைய இதுவும் ஒரு காரணமாகும்.
பொருளாதார விவகாரங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து, பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது. பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. ஆனால் சவால்கள் இன்னும் தொடர்கிறது. வளர்ச்சி இருந்தாலும் அனைத்து இடங்களில் சரிசமமாக இல்லை.
சாதகமான சூழல் என்னவென் றால் பேரியல் பொருளாதாரம் மிகவும் பலமாக இருக்கிறது. சர்வதேச சூழல்களில் இருந்து உருவாகும் பாதிப்புகளில் இருந்து இந்தியா தற்காத்துக்கொள்ளும்.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் சமீபகாலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பு 5.14 சதவீதமாக இருந்த வாராக்கடன், கடந்த செப்டம்பர் முடிவில் 6.21 சதவீதமாக இருக்கிறது. உள்நாட்டு வளர்ச்சி குறைவது மற்றும் சர்வதேச அளவில் தேவை குறைவது, அதனுடைய தொடர் விளைவுகளால் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நம்முடைய ஏற்றுமதி தொடர்ந்து 12 மாதங்களாக சரிந்து வருகிறது. அடுத்த வருடத்தில் ஏற்றுமதி மேம்படும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த சுப்ரமணியன் தலைமையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
பங்குச் சந்தைகள் சரிவு
ஜிடிபி வளர்ச்சியை மத்திய அரசு குறைவான கணித்ததால், நான்கு நாட்களாக உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் 285 புள்ளிகள் சரிந்து 25519 புள்ளியிலும், நிப்டி 82 புள்ளிகள் சரிந்து 7761 புள்ளியில் முடிந்தன. ஐடி துறை குறியீடு அதிகம் சரிந்தது. இதனை தொடர்ந்து மெட்டல் குறியீடும் சரிந்து முடிந்தன.