

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா அடுத்த வருடத்தில் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் குழு ஜிஎஸ்டிக்கு 18 சதவீத வரியை பரிந்துரை செய்திருந்தது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி குழு பரிந்துரை செய்த 18 சதவீத அளவை விடக் குறைவாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யும் என்று கூறினார்.
மாநிலங்களுக்கு 18 சதவீத வட்டி விகிதத்தை விட கூடுதலாக வரி விதிக்க அதிகாரம் இல்லை என்பதை சரக்கு மற்றும் சேவை வரி சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சிகள் தாமதபடுத்தி வருகிறது.
ஜிஎஸ்டி குறித்த தொழில் நிறுவனங்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது
எதிர்க்கட்சிகள் மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் தடுப்பது பற்றி கூறும் பொழுது நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் நிதி மசோதா ஆகியவை மற்ற மசோ தாக்களை விட எளிதாக நிறை வேற்ற முடிகிறது. வெறும் சத்தங்கள் மற்றும் இடையூறுகள் இருந்தால் நாடாளுமன்றம் செயல் படாமல் போய்விடும். இது அடுத்து வரும் காலங்களில் எதிர்க் கட்சிகளுக்கு முன்னோடியாக இருந்துவிடும். மேலும் ஒரு சதவீத கூடுதல் வரியை நீக்குவது காங்கிரஸின் நிலையாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள், சட்ட மசோதாவில் ஜிஎஸ்டி விகிதத்தை ஒன்று சேர்க்கவேண்டும் என்று கோரினால் அதை ஏற்க முடியாது.
மாநிலங்களுக்கிடையேயான விற்பனையில் ஒரு சதவீத கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்று உற்பத்தி மாநிலங்களான தமிழ்நாடு, குஜராத் மாநிலங்கள் பரிந்துரை செய்த போது அவர்கள், இதன் மூலம் அதிக பணத்தை உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்யலாம் என்று கூறினார்கள்.
முதல் ஐந்து வருடங்களுக்கு ஏற்படும் இழப்புகளை சரி செய்து தர உறுதியளிக்கிறேன் என்று இந்த உற்பத்தி மாநிலங்களிடம் நான் கூறிவிடுகிறேன். அதனால் ஒரு சதவீத கூடுதல் வரி பிரச்சினை சரியாகி விடும் என்று என் நாடாளுமன்ற நண்பர்களிடம் கூறிக்கொள்கிறேன். மேலும் 18 சதவீத வரியை சட்ட மசோ தாவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்ற மற்றொரு நிபந்தனைக்கு அருண் ஜேட்லி, பிற்சேர்க்கை(Tariffs) என்பது மசோதாவின் ஒரு பகுதி.
ஒரு வேளை 10 மாநிலங்களில் வறட்சி அல்லது வெள்ளம் ஒரு வாரத் திற்கு வந்தால் பிற்சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் பின்பு அதற்காக சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர முடியுமா? என்று ஜேட்லி கேள்வி எழுப்பினார். ஜிஎஸ்டி என்பது ஒரு யோசனை. இது அமல்படுத்தப்பட்ட பின்பு மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தால் செய்யலாம். மேலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று ஜேட்லி தெரிவித்தார்.
இந்தியாவில் வரி சீர்திருத்தம் தேவை: அரவிந்த் சுப்ரமணியன் கருத்து
நேர்முக மற்றும் மறைமுக வரிகளில் சீர்திருத்தம் செய்வது, திறமையான மற்றும் சுத்தமான அமைப்புக்கு இந்தியா மாற உதவிபுரியும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார். நிதியமைச்சர் மற்றும் நிறுவனங்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மேலும் அவர் கூறியதாவது:
எளிய மற்றும் கார்ப்பரேட் வரியை நீக்குவது போன்ற மரபு பிரச்சினைகளை சரிசெய்வது நாட்டை முன்னேற்றி கொண்டுச் செல்லும். தற்போது நடைமுறையில் இருக்கும் வரி பயங்கரவாதத்தை நீக்கி நாட்டின் தோற்றத்தை மாற்ற இருக்கிறோம். திறமையான, நவீன பரந்த அடிப்படையிலான வரி அமைப்பை வரும் காலத்தில் கொண்டுவந்தால் அது மிகப்பெரிய சீர்த்திருத்தமாக இருக்கும். சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தத்தில் முக்கிய பங்கு வகிக்கும். தற்போது நிதி மேற்பார்வை சவாலாக இருக்கிறது. இந்தியாவிற்கு எதிர்காலத்தில் நிலையான வரி அடித்தளம் வேண்டும். அப்போதுதான் விவசாயம், கிராம பொருளாதாரம், சமூக செலவுகளுக்கு நிதி ஒதுக்கமுடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.