

இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு நேற்று கூறியுள்ளது. உலக அளவில் 16 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளர் அமிதாப் காந்த் இந்த தகவலை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து அந்நிய நேரடி முதலீடு 40 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், கடந்த 17 மாதங்களின் அந்நிய முதலீட்டு வளர்ச்சி, அதற்கு முந்தைய 17 மாதங்களோடு ஒப்பிடுகிற போது 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
உற்பத்திதுறை, நுகர்வோர் பொருட்கள், சரக்கு போக்கு வரத்து, உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீடு வந்துள்ளதாகவும் கூறினார்.
நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்த் நேற்று கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து கூறியபோது ’ இங்கு ஏராளமான வளங்கள் உள்ளது. டிஜிட்டல் ஸ்டார்ட்அப்-பிலிருந்து உற்பத்தி துறை ஸ்டார்ப்அப் வளர்ச்சிகள் தேவையாக உள்ளது.
விவசாயத் துறை மற்றும் சமூக புத்தாக்க திட்டங்களிலும் ஸ்டார்ட்அப் அவசியம் என்ற துடன், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் இதைக் கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிட் டார்.