

2016-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி `மேக் இன் இந்தியா’ வாரம் மும்பையில் நடத்தப்பட இருக்கிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 60 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் (டிஐபிபி) செயலாளர் அமிதாப் காந்த் பேசியதாவது:
மிகப் பெரிய முயற்சியாக `மேக் இன் இந்தியா’ வாரத்தை மும்பையில் தொடங்க இருக்கிறோம். இது வரும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதியிலிருந்து 18 தேதி வரை நடைபெற உள்ளது. கண்டுபிடிப்பு, வடிவமைப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவைதான் இந்த நிகழ்ச்சியின் கருப் பொருள்.
`மேக் இன் இந்தியா’ திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு முதலீடு கள் வரத் தொடங்கியுள்ளன. `மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்ட பிறகு கடந்த 17 மாதங்களில் 35 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு உயர்ந்துள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மோட்டிவ், ஜவுளி, மரபுசாரா எரிசக்தி ஆகிய துறைகளில் நிலையான முதலீடுகளை பெற முடிந்தது. பாக்ஸ்கான், ஜெனித், வாண்டா குரூப் ஆப் சீனா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.
மேலும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு நாங்கள் புதிய உத்வேகத்தை அளிக்க இருக்கிறோம். அடுத்த ஒரு மாதத்தில் தொழில்துறை மற்றும் மேம்பாட்டு துறையை சார்ந்த அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள உள்நாட்டு நிறுவனங்களை சந்தித்து உத்வேகம் அளிக்க இருக்கிறோம்.
அரசாங்கம் தற்போது அனைத்து துறைகளையும் தாராள மயமாக்கியுள்ளது. இப்போது இந்தியா உலகிலேயே திறந்த பொருளாதாரமாக இருக்கிறது. மல்ட்டி பிராண்டை தவிர அனைத்தையும் வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.