

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எல்.ஐ.சி, டாபே (டிராக்டர் தயாரிக்கும் நிறுவனம்), அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பேஸ்புக் (இந்தியா) இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளும் சேவைகளும் வேறு வேறானவை. ஆனால், இந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவற்றை வழி நடத்தும் அத்தனை பேரும் பெண்கள்!
இந்தியாவில் மட்டுமா? உலகம் முழுக்கவும், ஏராளமான நிறுவனங்களில் பெண் சி.இ.ஓ – க்கள். நமக்கு பரிச்சயமான இந்திரா நூயி தலைமை வகிக்கும் பெப்ஸி மட்டுமல்ல, யாஹூ, ஹ்யூலட் பக்கார்ட் (Hewlett Packard) , ஜெராக்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ், ஐ.பி.எம், லாக்ஹீட், ட்யூப்பா (DuPont) எனப் பல கம்பெனிகளின் சி.இ.ஓக்கள் பெண்கள்.
நம் ஊர் சாப்ட்வேர் கம்பெனிகளில் ஏராளமான பெண்கள். இவை கடந்த சில ஆண்டுகளில் வந்துள்ள மாற்றங்கள். கார்ப்பரேட் உலகமே பெண்கள் கைகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆனால், இது நிஜம் இல்லை, வெறும் மாயத்தோற்றம்தான் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
அண்மையில், எமிலி அமானத்துல்லா (Emily Amanatullah), மைக்கேல் மோரிஸ் (Michael Morris) என்னும் இரு அமெரிக்க மேனேஜ்மென்ட் பேராசிரியர்கள் நடத்தியிருக்கும் ஆராய்ச்சி. எமிலி, டெக்ஸாஸ் ஆஸ்டின் பல்கலைக் கழகத்திலும், மைக்கேல் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும் பணியாற்றுகிறார்கள். இவர்களின் ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா?
இங்கும் வாரிசுகள்தான்
அமெரிக்காவின் பார்ச்சூன் பத்திரிகை ஒவ்வொரு வருடமும், உலகத்தின் கம்பெனிகளை, அவர்களின் விற்பனை அடிப்படையில் பட்டியலிடுகிறது. இந்தப் பட்டியலில் இருக்கும் 1000 கம்பெனிகளில் 46 கம்பெனிகளில் மட்டுமே, பெண் சி.இ.ஓக்கள். அதாவது, மீதி 954 கம்பெனிகளில் சி.இ.ஓக்கள் ஆண்கள்!
இந்த 1000 கம்பெனிகளின் இயக்குநர்களில் 16 சதவிகிதம் மட்டுமே பெண்கள். கார்ப்பரேட் உயர் அதிகாரிகளில் பெண்கள் 14 சதவிகிதம் மட்டுமே. சம திறமைகள் கொண்ட ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் எடுத்துக்கொண்டால், வாழ்நாளில், ஆணைவிடப் பெண் 7,13,000 டாலர் குறைவாகச் சம்பாதிக்கிறார்.
அமெரிக்கா சி.இ.ஓ.க்களில் பெண்களின் எண்ணிக்கை 4.6%. ஆசிய நாடுகளில் 6% இந்தியாவில் 11%. நம் நாடு பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முன்னணியில் நிற்கிறது என்று பெருமைப்படாதீர்கள். இந்தியாவின் பெரும்பாலான பெண் சி.இ.ஓக்கள், நிறுவன உரிமையாளர்களின் வாரிசுகள். இந்த ரத்தத்தின் ரத்தங்களில், எத்தனை பேர் திறமையால் அந்தப் பதவிகளுக்கு வந்தார்கள்? விடை காணமுடியாத கேள்வி இது.
பிஸினஸை விட்டு விடுவோம். நாட்டு நிர்வாகத்தை எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் 30 முதல்வர்கள் இருக்கிறார்கள். இவர்களில் வெறும் நான்கு பேர் மட்டுமே பெண்கள்: 35 ஆளுநர்கள் இருக்கிறார்கள். இவர்களிலும் மூன்றே மூன்று பேர்தான் பெண்கள்!
நார்வே நாட்டில் இருக்கும் Norwegian School of Economics & Business Administarion – இல் பைனான்ஸ் துறை பேராசிரியர் கரீன் தாபர்ன் (Karin Thorburn). இவருடைய ஆராய்ச்சிப்படி, பெண் சி.இ.ஓக்கள் நடத்தும் கம்பெனிகள் ஆண்கள் நடத்தும் போட்டிக் கம்பனிகளைவிட, 42 சதவிகிதம் அதிக லாபம் ஈட்டுகின்றன.
பெண்கள் ஏன் திணறுகிறார்கள்?
மதிப்புக்கும், மரியாதைக்குமுரிய பெண்களே, இத்தனை திறமைகள் கொட்டிக் கிடக்கும் நீங்கள், அலுவலகம் தொடர்பான டீல்களை வெற்றிகரமாக முடிக்கும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கை டீல்களில் ஏன் திணறுகிறீர்கள்? எமிலி, மைக்கேல் நடத்திய ஆராய்ச்சி, அறிவியல் முறையில் இந்தக் கேள்வியை அணுகியது.
ஒரு பெண்ணோ, ஆணோ தனியாக இந்த ஆராய்ச்சியைச் செய்தால், ஆணாதிக்கக் கொள்கை (Male chauvanism) என்னும் பாரபட்சம் வந்துவிடலாம். அதைத் தவிர்க்கும் வகையில், எமிலி பெண்: மைக்கேல் ஆண். முன் அனுமானங்கள் எதுவுமின்றி, ஆராய்ச்சியில் பங்கெடுக்கும் பெண்களைத் தேர்ந்தெடுத்தார்கள். பல கேள்விகள் கேட்டும், பரிசோதனைகள் நடத்தியும், அந்தப் பெண்களின் டீல் போடும் திறமைகளைக் கணித்தார்கள். அவர்கள் நடத்திய ஒரு பரிசோதனை. இதில் இரண்டு அம்சங்கள்.
முதலில், அவர் உயர் அதிகாரியிடம் தன் சம்பள உயர்வுக்காக வாதாடவேண்டும்: இரண்டாம் அம்சம், தன் பெண் சகாவுக்காகப் பேச்சு வார்த்தைகள் நடத்தவேண்டும்.
பெரும்பாலான பெண்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சக ஊழியர்களுக்கு வெற்றிகரமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள், சம்பள உயர்வு வாங்கிக் கொடுத்தார்கள். தங்கள் சொந்த விஷயங்களில் சொதப்பினார்கள்.
சமுதாய எதிர்பார்ப்பு
எமிலியும், மைக்கேலும் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார்கள். காலம் காலமாக, ஆண்களும், பெண்களும் எப்படி நடந்துகொள்வார்கள் என்று சமுதாயத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன்படி, பொதுவாக, ஆண்கள் தனக்குப் பிறகுதான் தானம் என்று நம்புபவர்கள். தங்கள் உரிமைக்குப் போராடுவார்கள், தங்கள் தேவைகள் பூர்த்தி ஆன பிறகு, அடுத்தவர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள்.
மாறாகப் பெண்கள், தியாக உணர்வு அதிகமானவர்கள். பிறருக்காக வேகத்துடன் குரல் கொடுப்பார்கள். தங்கள் உரிமைகளைக் கேட்கத் தயங்குவார்கள்.
பரிசோதனையில், பெண்கள் தங்கள் சகாக்களுக்குச் சம்பள உயர்வு கேட்டபோது, அவர்களின் மேலதிகாரிகள் (ஆணோ, பெண்ணோ) ‘பெண்கள் பிறருக்கு உதவுபவர்கள்’ என்னும் அவர்களுடைய மனபிம்பத்தோடு இந்தச் செய்கை ஒத்துப்போனதால், இந்த வேண்டுகோள்களைத் திறந்த மனங்களுடன் கேட்டுக்கொண்டார்கள், பூர்த்தி செய்தார்கள்.
பெண்கள் தங்களுடைய சொந்தச் சம்பள உயர்வு பற்றிப் பேசியபோது, மேலதிகாரிகள் இந்த வேண்டுகோள்களைக் கேட்கும் மனநிலையில் இல்லை. சூடுபட்ட பூனை தெரியுமா? பூனை ஒரு நாள் பால் குடித்தது. பால் சூடாக இருந்தது. அதன் நாக்கு பொத்துவிட்டது. அன்று முதல், பூனை ஜில் என்று இருக்கும் பாலையும் குடிக்க மறுத்தது. பெண்களும் இப்படித்தான், தங்களுக்காக எதையும் கேட்கத் தயங்குகிறார்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும்
பெண்களே, ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். காலம் மாறிவிட்டது. இன்று, அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும். ஒரு உதாரணம் சொல்கிறேன்.
மார்க் ஸூக்கர்பெர்க், பேஸ்புக் தொடங்கிய ஆரம்ப நாட்கள். கூகுள் கம்பெனியில் வைஸ் பிரசிடென்ட் பதவியில் இருந்தார் ஷெரில் ஸான்ட்பெர்க் (Sheryl Sandberg) என்னும் பெண்மணி. அபாரத் திறமைசாலி.
பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ- வாக ஷெரிலை நியமிக்க மார்க் விரும்பினார். பல சந்திப்புகள், பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. டீல் முடிந்தது. ஷெரில், பேஸ்புக் நிறுவனத்தில் சேரச் சம்மதித்தார். ஸூக்கர்பெர்க் தருவதாகச் சொன்ன சம்பளத்தை மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டார்.
வீடு திரும்பிய ஷெரில் தன் கணவரிடமும், மைத்துனரிடமும் விவரங்களைச் சொன்னார். ”நீ இன்னும் அதிகச் சம்பளம் கேட்டிருக்கவேண்டும்” என்றார் கணவர்.
மைத்துனர் குரலை எழுப்பிச் சொன்னார், ” இதே வேலையை ஒரு ஆணுக்குக் கொடுத்தால், நிச்சயமாக அவர் வரமாட்டார். பெண் என்னும் ஒரே காரணத்துக்காக நீ ஏன் குறைந்த சம்பளத்துக்குச் சம்மதிக்கிறாய்?”
ஷெரில் தயங்கினார். ஸூக்கர்பெர்க் என்ன நினைப்பாரோ என்கிற பயம். மறுநாள், மனதை உறுதிப்படுத்திக்கொண்டு, தனக்கு என்னென்ன காரணங்களால் எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நியாயப்படுத்தினார். ஸூக்கர்பெர்க் சம்மதித்தார். சி.இ.ஓ. ஷெரில் தலைமையில் பேஸ்புக் 800 கோடி டாலர்கள் வருமானத்தைத் தொட்டிருக்கிறது.
திறமைசாலிப் பெண்களே, ஷெரில் ஸான்ட்பெர்க் காட்டிய வழியைப் பின்பற்றுங்கள். சம்பள உயர்வா, பதவி உயர்வா, தயக்கங்களைத் தூக்கி எறியுங்கள். தட்டுங்கள், கதவுகள் திறக்கும். தன்னம்பிக்கையோடு, மன உறுதியோடு உங்கள் உரிமைக் கோரிக்கைகளை எடுத்துவையுங்கள். நீங்கள் ஈடுபடும் டீல்கள் அத்தனையும் ஜெயிக்கும்.
slvmoorthy@gmail.com
(கற்போம்)