

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 11 வருடங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிந்தது. இவ்வளவு சரிந்தாலும் மேலும் சரியும் என்றே பல வர்த்தகர்கள் கணித்திருக்கிறார்கள்.
எண்ணெய் உற்பத்தி நாடுகள் டிசம்பர் 4-ம் தேதி கூடி உற்பத்தி உச்சவரம்பு எல்லையை நீக்கினார்கள். இதனால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துவருகிறது.
திங்கள் கிழமை ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 36.33 டாலராக இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 36.20 டாலாக இருந்தது. இந்த விலைக்கு கீழே சரியும் பட்சத்தில் மேலும் சரியும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே 2016-ம் ஆண்டுக்கான கச்சா எண்ணெய் எதிர்பார்ப்பு விலையை மூடி’ஸ் நிறுவனம் குறைத்திருக்கிறது. தங்களது முதலீட்டாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மூடிஸ் தனது கருத்துகளை தெரிவித்திருக்கிறது.
அடுத்த வருடம் கச்சா எண்ணெய் விலை பிரெண்ட் 53 டாலராக இருக்கும் என ஏற்கெனவே கணித்திருந்தது. இப்போது அந்த விலை 43 டாலாராக இருக்கும் என்று குறைத்திருக்கிறது.
அதேபோல 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஒரு பேரலுக்கு ஐந்து டாலர் அளவில் மட்டுமே உயர வாய்ப்பு இருப்ப தாகவும், 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஒரு நாளைக்கு 13 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படும் என்று மூடிஸ் தெரிவித்திருக்கிறது.