

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் சிறு முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பங்குச் சந்தையில் நுழைவதுதான் சிறந்த வழி என்று பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார்.
புதிய பங்கு வெளியீடுகளில் (ஐபிஓ) சிறு முதலீட்டாளர்கள் பங்கேற்காதது குறித்து தாம் பெரிதும் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார். பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடப் பதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செபி எடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சில்லரை முதலீட்டாளர்கள் பொதுப் பங்கு வர்த்தகத்தில் பங்கேற்கவில்லையென்றால் அது பிரச்சினையில்லை. அதற்குப் பதிலாக நிறுவனங்களின் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலம் பங்குச் சந்தையில் நுழைவது மிகவும் சிறந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
முதலீடு சார்ந்த இணையதள நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய சின்ஹா, மேலும் கூறியது:
இந்தியா உள்பட உலகம் முழுவதும் பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் நுழைவதுதான் முதலில் அதிகமாக இருக்கும். சிறு முதலீட்டாளர்கள் பங்கேற்காவிடில் அதற்கு மாற்றாக நீண்ட கால அடிப்படையில் திட்டமிட வேண்டும். மாற்று வழிகளில் சில்லரை முதலீட் டாளர்கள் நுழைவதற்கு ஏற்ற வழியை உருவாக்க வேண்டும். அவ்வகையில் பரஸ்பர முதலீடு தான் சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வழி. அதேசமயம் சிறு முதலீட்டாளர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும்.
சிறு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தை பற்றிய விவரம் அறியாத முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் நுழையக் கூடாது என்றே செபி கருதுகிறது.
இத்தகைய சிறு முதலீட்டா ளர்கள் நேரடியாக முதன்மை பங்கு வர்த்தகம் (ஐபிஓ) அல்லது பங்குகளை வாங்கி விற்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. பங்குச் சந்தையைப் பற்றி நன்கு அறிந்த முதலீட்டாளர்கள் வாயிலாக இதைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு நுழைவதே சிறந்தது.
நம்பிக்கை ஏற்படுத்துவது, வர்த்தகம் புரிவதற்கு எளிய சூழலை உருவாக்குவது உள்ளிட்டவை மூலம் முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பங்குச் சந்தையில் ஈடுபட வைக்க முடியும் என்றார் சின்ஹா.