

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள விப்ரோ நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த வெளிப்பணி ஒப்படைப்பு பணியில் ஈடுபட்டுள்ள விடியோஸ் குழும நிறுவனத்தை 13 கோடி டாலருக்கு (சுமார் ரூ. 861 கோடி) வாங்கியுள்ளது.
வெளிப்பணி ஒப்படைப்புப் பணியில் (பிபிஓ) தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை உதவும் என விப்ரோ உறுதியாக நம்புகிறது.
இந்த கையகப்படுத்தல் நடவடிக்கைக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. நியூஜெர்ஸியில் 2003-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட விடியோஸ் குழுமம் பங்கு பரிவர்த்தனை சார்ந்த பணிகளை மேற்கொள்கிறது. பங்கு விற்பனைக்குப் பிந்தைய நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. நிதி சார்ந்த மாற்று மேலாண்மை பணிகளை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் இந்நிறுவனம் மேற்கொள்கிறது.
அக்கவுன்டிங் சேவை உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றும் இந்நிறு வனத்தில் 400 பணியாளர்கள் உள்ளனர்.
இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையானது பங்குச் சந்தை ஒப்புதலுக்குப் பிறகு நிறைவேறும் என தெரிகிறது. அதாவது மார்ச் 2016-க்குப் பிறகு இது நடைமுறைக்கு வரும்.
விடியோஸ் நிறுவனம் அதே பெயரில் தொடர்ந்து தனது பணிகளை நிறைவேற்றும். இதற்கு பின்புலமாக விப்ரோ நிறுவனம் இருக்கும். அதேபோல நிறுவனத்தின் நிர்வாகவியல் பணியாளர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பர்.
பங்குச் சந்தை சார்ந்த பணிகளில் விப்ரோவின் செயல்பாடுகள் மேலும் சிறக்க இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை உதவும் என்று விப்ரோ நிறுவனத்தின் நிதித்துறை தலைமை அதிகாரி ஷாஜி பரூக் தெரிவித்துள்ளார்.