

சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) மாதிரி சட்ட வரைவு இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு விடும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ரேஷ்மி வர்மா அசோசேம் நடத்திய விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:
நாங்களும் ஜிஎஸ்டிக்கான மாதிரி சட்ட வரைவு உருவாக்கி கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியை உருவாக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். இது முடிந்தவுடன் இந்த வரைவு பொது தளத்தில் வைக்கப்பட்ட பின்னர் வர்த்தக அமைப்புகளோடு ஆலோசனை நடத்தப்படும். சட்ட வரைவுக்கான அடிப்படைகளை தயார் செய்து விட்டோம். தற்போது மாதிரி வரைவை உருவாக்க ஆலோசனைகள் நடத்தி வருகிறோம். மேலும் இதில் நிறைய மாற்றங்களைச் செய்ய இருக்கிறோம்.
மேலும் மாநிலங்களுக் கிடையேயான சரக்கு பரிமாற்றங்களுக்கு கூடுதலாக ஒரு சதவீத வரியை கைவிட நிறுவனங்கள் வேண்டுகோள் வைத்தால் அரசாங்கம் கைவிட தயாராக உள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பின்பு ஒரு சதவீத கூடுதல் வரியை நிறுத்தலாம் என்ற முடிவு எட்டபட்டால் நாங்கள் கைவிட தயாராக இருக்கிறோம்.
ஆனால் ஒரு சதவீத கூடுதல் வரியை நிறுத்த வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஏனெனில் இரண்டு வருடத்திற்கு மட்டுமே இந்த மாற்றங்களைச் செய்தால் தொடர் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அரசாங்கம் ஏற்கனவே ஜிஎஸ்டி மசோதாவில் பல மாற்றங்களை செய்துள்ளது. தற்போது ஜிஎஸ்டி மாநிலங்களவையில் இருக்கிறது.
ஒரு சதவீத கூடுதல் வரியை பற்றி நிறைய கருத்துகள் வருகின்றன. தேர்வுக் குழு இதை பார்த்து வருகின்றனர். மேலும் பரிந்துரைகளையும் அளித்துள்ளார்கள். இதை நாங்கள் ஏற்றுக் கொண்டால் தொடர் விளைவுகள் மறைந்து விடும். ஏனெனில் ஒரு சதவீத கூடுதல் வரி தற்போது விற்பனைக்கு மட்டும்தான் உள்ளது. சரக்குகளை வழங்குவதற்கு கிடையாது.
ஒவ்வொரு முறையும் ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது ஒரு சதவீத கூடுதல் வரி அங்கே தேவையிருக்காது. இந்த மாற்றம் ஏற்கெனவே இந்த மசோதாவில் செய்யப்பட்டுவிட்டது.