

எல்.ஐ.சி. நொமுரா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் 19.3 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வாங்குகிறது. இந்த இணைப்பின் மதிப்பு 27 கோடி ரூபாய். தவிர எல்.ஐ.சி நொமுரா பண்ட் டிரஸ்டி நிறுவனத்தில் இதே அளவு பங்குகளையும் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் வாங்குகிறது. இதன் மதிப்பு 1.5 லட்ச ரூபாய் ஆகும்.இந்த இரு முடிவுகளும் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் எடுக்கப்பட்டது.
தூய்மை இந்தியா வரி வருமானம் ரூ.10,000 கோடி?
தூய்மை இந்தியா வரி மூலம் மத்திய அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் 10,000 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாநிலங்களவைக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு கூறினார்.
இந்த வரிமூலம் குறிப்பிட தொகையை வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கு ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை, நடப்பு நிதி ஆண்டில் மட்டுமல்லாமல் அடுத்த நிதி ஆண்டுக்கும் எந்த இலக்கும் நிர்ணயம் செய்யவில்லை. ஆனால் இந்த வரி மூலம் நடப்பு நிதி ஆண்டில் 10,000 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜெயந்த் சின்ஹா கூறினார். கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் அனைத்து விதமான சேவைகளுக்கு 0.5 சதவிதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
சிபிடிடி தலைவராக ஏகே ஜெயின் நியமனம்
தலைமை வருவாய் துறை அலுவலரான ஏகே ஜெயின், மத்திய நேரடி வரி ஆணையத்தின் (சிபிடிடி) தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1978-ம் ஆண்டு ஐஆர்எஸ் பிரிவைச் சேர்ந்தவர். தற்போது தலைவராக இருக்கும் அனிதா கபூரின் பதவிக் காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து ஏகே ஜெயின் நியமிக்கப்பட்டிருக்கிறார்.இவரின் பதவிக்காலம் வரும் 2016-ம் ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே அனிதா கபூர் நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வரி சீர்திருத்தக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தலைவரை தவிர நேரடி வரி ஆணையத்தில் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர்.