

நடப்பு கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நிறைவேறுவது கடினமே. இருந்தாலும் மத்திய அரசு இதர மூன்று மசோதாக்களை நிறைவேற்ற முயற்சி எடுக்கும். குறையுள்ள நிலையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறுவதை விட, காலதாமதம் ஏற்படுவது நல்லது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
தொழில்துறை அமைப்பான ஃபிக்கியின் 88-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உரையாற் றிய ஜேட்லி இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது.
காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இந்த மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஏற்படுகிறது. குறையுள்ள நிலையில் நிறைவேறுவதை விட காலதாமதம் நல்லது. நாங்கள் (காங்கிரஸ்) இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவிட்டால் மற்றவர்கள் ஏன் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் காரணமாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன். நாட்டின் ஒட்டுமொத்த நன்மைக்கு அரசியல் ஒரு தடையாக இருக்கக்கூடாது.
காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி வட்டி விகிதத்தை அரசியல் சாசனத்துக்குள் (Constitution) கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறது. இது நடைமுறை சாத்தியமற்றது. இந்தியா வளர்ந்து வரும் நாடாகும். அரசியல் சாசனத்தில் வரி விகிதத்தை கொண்டுவருவதன் மூலம் வளர்ச்சி தடைபடும். அதனால் எதிர்கட்சிகள் இந்த கோரிக்கையை கைவிட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் திவால் சட்டம், வர்த்தக நீதிமன்ற சட்டம், சமரச தீர்ப்பாயம் சட்டம் கொண்டு வர முயற்சி செய்வோம். இந்த முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முயற்சி செய்வோம். இந்த விஷயத்தில் நாட்டின் நலனுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் என நம்புகிறேன் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதற்காக முன்னாள் சட்டத்துறை செயலாளர் டிகே விஸ்வநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதன் படி திவால் வழக்குகளை 180 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
மத்திய அரசு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது. ஆனால் இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரஸ் சில கோரிக்கைகளை வைத்து வருவதால் இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் தொடருகிறது.
இந்த மசோதா மறைமுக வரி விதிப்பு முறையில் செய்யப்படும் மிகப்பெரிய சீர்திருத்தமாகும். நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது.