

நடப்பாண்டில் முக்கிய குறியீ டான சென்செக்ஸை விட மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. நடப்பாண்டில் சென்செக்ஸ் 6 சதவீதம் சரிந்தது. மாறாக மிட்கேப் குறியீடு 6 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 5 சதவீதமும் உயர்ந்து முடிந்தன.
40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பலமான மத்திய அரசு உருவானது. இதனால் முதலீட்டா ளர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி 30 சதவீதம் உயர்ந் தது.
அரசியல் காரணங்களால் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததால் இந்த வருடம் பங்குச்சந்தை சரிந்தது.
2015-ம் ஆண்டு சென்செக்ஸ் அதிகபட்சமாக 30024 புள்ளிகளை மார்ச் 4-ம் தேதி தொட்டது. அதேபோல செப்டம்பர் 8-ம் தேதி 24833 புள்ளிகள் அளவுக்கு சரிந்தது. மிட்கேப் குறியீடு ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று அதிகபட்சமாக 11,666 புள்ளியை தொட்டது. மே மாதம் 7-ம் தேதி குறைந்தபட்சமாக 9983 புள்ளியை தொட்டது. ஸ்மால்கேப் குறியீடு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிகபட்சமாக 12203 புள்ளிகளையும், குறைந்த பட்சமாக 10178 புள்ளிகளையும் (ஆகஸ்ட 25) தொட்டது.
பெரும்பாலான சென்செக்ஸ் மற்றும் நிப்டி பங்குகள் ஏற்றுமதி மற்றும் முக்கிய கமாடிட்டிகளின் விலை சரிவு காரணமாக கடும் நெருக்கடியில் இருந்தன. அதே சமயத்தில் பெரும்பாலான ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்தால் பங்குகள் உயர்ந்தன.
தவிர அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து விற்கும் மனநிலையில் உள்ளனர். ஆகஸ்ட் 24-ம் தேதி மட்டும் சென் செக்ஸ் 1624 புள்ளிகள் சரிந்தன. அன்று மட்டும் சந்தை மதிப்பு 7 லட்சம் கோடி ரூபாய் குறைந்தது.
இந்த ஆண்டு முக்கிய குறியீடுகள் சரிவை சந்தித்ததால், அடுத்த வருடம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடையும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.