

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் 3 புதிய உற்பத்தி ஆலைகளை தொடங்க உள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதியை குறைக்க இந்த உற்பத்தி ஆலைகளை மைக்ரோமேக்ஸ் தொடங்க இருக்கிறது.
இந்த மூன்று புதிய ஆலைகள் ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட இருக்கின்றன. இந்த ஆலைகள் அடுத்த வருடம் செயல்பட தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மைக்ரோ மேக்ஸ் நிறுவனர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: தெலுங் கானா மாநிலத்தில் 20 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிட அமைப்பு ஆகியவை தயாராக உள்ளது. அதே போல ராஜஸ்தானில் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கட்டிட வேலைகள் இன்னும் சில நாட்களில் தொடங்கிவிடும். திருப்பதியிலும் விரைவில் தொடங்கிவிடுவோம். ஒவ்வொரு ஆலைகளிலும் 3,000 -3,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். ஓவ்வொரு திட்டத்துக்கும் 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம்.
2017-ம் ஆண்டுக்குள் நாங்கள் பேட்டரி, மற்ற பொருட்களை இந்தியாவில் தயாரிக்க தொடங்கி விடுவோம்.
எதிர்காலத்தில் இந்தியா விலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு சந்தை வளர்ந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.