

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை வரும் 27-ம் தேதி தொடங்க இருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானியின் பிறந்த நாளில் இந்த சேவை தொடங்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி குழுமத்தை சேர்ந்தது ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம். ஆரம்ப கட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை சேர்ந்த 80,000 பணியாளர்களுக்கு இந்த சேவை தொடங்கப்படும். பிறகு ஏப்ரல் மாதத்தில் வர்த்தக நோக்கத்தில் இந்த தொலைத்தொடர்பு சேவை விரிவுப்படுத்தப்படும் என்று நிறுவனதின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் பணியாளர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன்பு சோதனை அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது. வர்த்தக சேவை தொடங்கப்பட்டதும் பணியாளர்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படும்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பார்கில் தொடக்க விழா நடக்கிறது. இந்நிகழ்ச்சி நிறுவனத்தின் அலுவலகம் உள்ள 1,000 இடங்களில் நேரடியாக ஒளிப்பரப்படும் என்று பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஐடியா வரும் மார்ச் மாதத்தில் 4ஜி சேவையை தொடங்க இருக்கிறது.