Last Updated : 25 Dec, 2015 11:24 AM

 

Published : 25 Dec 2015 11:24 AM
Last Updated : 25 Dec 2015 11:24 AM

பார்ச்சூன் 500 இந்தியா: முதலிடத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

2015-ம் ஆண்டிற்கான வருவாய் அடிப்படையில் தொழில் நிறுவ னங்களின் பட்டியலை `பார்ச்சூன் 500 இந்தியா’ என்ற தலைப்பில் பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் இந்தப் பட்டி யலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 4,51,911 கோடி ரூபாய்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி நடத்தி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தப் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 3,82,565, கோடி ரூபாய்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,67,025 கோடி ரூபாய் ஆண்டு வருவாயுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த வருடம் ஐந்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2014-ம் ஆண்டில் ஆறாவது இடத்தில் இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்த வருடம் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதன் ஆண்டு வருவாய் 2,57,289 கோடி ரூபாய். 2,40,367 கோடி ரூபாய் வருவாயுடன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிறுவனம் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது

மொத்த நிறுவனங்களின் வரு மானம் கடந்த வருடத்தை விட 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் நிறுவனங்களின் லாபம் 5.9 சதவீதம் குறைந்துள்ளது என்று பார்ச்சூன் இந்தியா பத்திரிகை கூறியுள்ளது.

மேலும் பார்ச்சூன் 500 இந்தியா நிறுவனங்களின் மொத்த வருவாய் 2010-ல் இருந்ததை விட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2010 ம் ஆண்டு இந்த நிறுவனங்களின் மொத்த வருவாய் 38,16,000 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 71,27,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2,13,380 கோடி ரூபாய் வருவாயுடன் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) நிறுவனம் ஆறாவது இடத்திலும், ஓஎன்ஜிசி நிறுவனம் 1,65,161 கோடி ரூபாய் வருவாயுடன் ஏழாவது இடத்திலும், டாடா ஸ்டீல் நிறுவனம் 1,41,669 கோடி ரூபாய் வருவாயுடன் எட்டாவது இடத்திலும் இருக்கிறது. ஹிண்டால்கோ மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் முறையே ஒன்பதாவது பத்தாவது இடத்தில் உள்ளன.

ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, பார்மா, வங்கிகள், மின்சாரம், ரியல் எஸ்டேட், ஊடகம், உள்கட்டமைப்பு என் பல்வேறு துறைகளில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களின் மொத்த வருவாய் அடிப்படையில் பட்டியலிடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x