தத்கால் கட்டண உயர்வால் ரயில்வேக்கு ரூ.50 கோடி கூடுதல் வருமானம்

தத்கால் கட்டண உயர்வால் ரயில்வேக்கு ரூ.50 கோடி கூடுதல் வருமானம்
Updated on
1 min read

தத்கால் பதிவுக் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் ரயில்வேத்துறைக்கு இந்த நிதி ஆண்டில் ரூ. 50 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உடனடியாக ரயில் பயணம் மேற்கொள்வோருக்கு வசதியாக தத்கால் முன்பதிவு முறை உள்ளது. இதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ரூ. 10-லிருந்து ரூ. 100 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ளதால் கூடுதல் கட்டண நிர்ணயத்தால் ரயில்வேத்துறைக்கு ரூ. 50 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும் என தெரிகிறது. முழு ஆண்டுக்கு ரூ. 200 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 25-ம் தேதியிலிருந்து தத்கால் குறைந்தபட்ச கட்டணம் மற்றும் அதிகபட்ச கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி முன் பதிவுக் கட்டணத்தில் மட்டும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

படுக்கை வசதி கொண்ட முன்பதிவு கட்டணம் குறைந்த பட்சம் ரூ. 10-லிருந்து ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டது. இதேபோல ஏசி இருக்கை வசதி பயண கட்டணம் ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டது. ஏசி 3 அடுக்கு படுக்கை வசதி பயணக் கட்டணம் ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டது. ஏசி 2 அடுக்கு படுக்கை வசதி பயணக் கட்டணம் ரூ. 100 உயர்த்தப்பட்டுள்ளது.

போலி ஏஜென்டுகளைத் தடுக்கும் நோக்கில் ரயில்வே நிர்வாகம் முன்பதிவு ரத்து செய்யும்போது பிடித்தம் செய்யும் தொகையின் அளவை கடுமையாக உயர்த்தியது. அத்துடன் முன்பதிவு ரத்து செய்யும் விதிமுறைகளையும் கடுமையாக்கியுள்ளது.

முன்பதிவு செய்யும் பயண டிக்கெட்டுகளில் 19 சதவீதம் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கண்டறிந்து இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல பயண நேரத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பாக 91 சதவீத அளவுக்கு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதும் தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக மொத்தம் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இவற்றைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் கொண்டுவந்துள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in