

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ரஷியாவைச் சேர்ந்த ரோஸ்நெப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஷிய கடல் பரப்பில் நில ஆய்வு, எண்ணெய் அகழ்வு, ஹைட்ரோ கார்பன்களைக் கண்டறிவது உள்ளிட்ட பணிகளுக்கு ரஷிய நிறுவனத்தின் ஒத்துழைப்பு இந்நிறுவனங்களுக்குக் கிடைக்கும்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அணுசக்தி, ஹைட்ரோகார்பன், பாதுகாப்பு உள்பட 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதில் இந்த ஒப்பந்தமும் ஒன்றாகும்.
நீண்ட கால அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு சைபீரியா பகுதியில் மிகுந்த எண்ணெய் வளம் மிக்க பகுதியில் எண்ணெய், எரிவாயு வளங்களைக் கண்டுபிடிக்க ரோஸ்நெப்ட் நிறுவனம் இந்திய நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பை அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்துள் ளது.
இதன் மூலம் இப்பகுதியில் எண்ணெய் வளங்களைக் கண்டறிவதில் முன்னேற்ற நிலையை எட்ட இந்த ஒப்பந்தம் துணை புரிந்துள்ளது என்று ஐஓசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.