ரூ.1,150 கோடி வரி ஏய்ப்பு: மோசடிதாரர்களின் 3-வது பட்டியலை வெளியிட்டது வருமான வரித்துறை

ரூ.1,150 கோடி வரி ஏய்ப்பு: மோசடிதாரர்களின் 3-வது பட்டியலை வெளியிட்டது வருமான வரித்துறை
Updated on
1 min read

ரூ.1,150 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு மோசடி செய்த 18 பேரின் பெயர்களை வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் முதல் தங்கம் மற்றும் வைர நகை ஜுவல்லரிகள் வரை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


முன்னதாக வெளியிடப்பட்ட 2 அறிவிப்புகளில் 49 பெயர்கள் பட்டியலிடப்பட்டன. இந்த 2 முந்தைய அறிவிப்புகளில் சுமார் ரூ.2000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தவர்கள் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. இவர்களை ஒன்று கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது வரி செலுத்த போதிய சொத்துக்கள் இல்லாமல் உள்ளனர் என்று வருமான வரித்துறையின் பொது அறிவிப்பு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை வருமான வரித்துறை தயாரிக்க, அதை நிதியமைச்சகம் நாட்டின் முன்னணிப் பத்திரிகைகளுக்கு அனுப்பியது.

இதில் அதிகபட்சமாக மும்பையைச் சேர்ந்த உதய் எம்.ஆச்சாரியா (லேட்) மற்றும இவரது சட்ட வாரிசுகள் அமுல் ஆச்சாரியா மற்ரும் பவன ஆச்சாரியா ஆகியோரது பெயரில் ரூ.779.04 கோடி வரி ஏய்ப்புத் தொகை உள்ளது.

இவர்கள் உடனடியாக வரிநிலுவைத் தொகையை செலுத்த வருமான வரித்துறை அறிவுறுத்தியதோடு, இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் வருமான வரித்துறைக்குத் தெரிவிக்குமாறு பொது அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழில் நிறுவனங்களில் சில:

அகமதாபாத்தைச் சேர்ந்த ஜக் ஹீத் ஏற்றுமதி நிறுவனம் (ரூ.18.45 கோடி வரி ஏய்ப்பு)

ஜஷுபாய் ஜுவல்லர்ஸ் (ரூ.32.13 கோடி)

கல்யாண் ஜுவல்லர்ஸ் (பி) லிட். (ரூ.16.77 கோடி)

லிவர்பூல் ரீடெய்ல் இந்தியா லிமிடட் (ரூ.32.16 கோடி)

தர்னேந்திரா ஓவர்சீஸ் லிமிடட் (ரூ.19.87 கோடி)

பிரபுல் அக்கானி (ரூ.29.11 கோடி)

ஹைதராபாத்தைச் சேர்ந்த நெக்ஸாஃப்ட் இன்போடெல் (ரூ.68.21 கோடி), போபாலைச் சேர்ந்த கிரேட் மெட்டல்ஸ் நிறுவனம் (ரூ.13.01 கோடி).

சூரத்தைச் சேர்ந்த சாக்‌ஷி ஏற்றுமதி நிறுவனம் (ரூ.26.76 கோடி)

டெல்லி கரோல்பாக்கைச் சேர்ந்த ஸ்ரீமதி பிம்லா குப்தா (ரூ.13.96 கோடி)

போபாலைச் சேர்ந்த கேரிமா மெஷினரி (ரூ.6.98 கோடி)

மும்பையைச் சேர்ந்த திரன் அனந்த்ராய் மோடி (ரூ.10.33 கோடி)

ஹேமங் ஷா (ரூ.22.51 கோடி)

மொகமது ஹாஜி என்கிற யூசுப் மோட்டார்வாலா (ரூ.22.34 கோடி)

சண்டிகரில் உள்ள வீனஸ் ரெமடீஸ் (ரூ.15.25 கோடி).

இவர்களது வருமான வரிக் கணக்கீட்டு காலம் 1989-90-லிருந்து 2013-14 வரை ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in