வணிக நூலகம்: பழக்கங்களின் சக்தி

வணிக நூலகம்: பழக்கங்களின் சக்தி

Published on

பழக்கத்தின் திறன் எந்தளவு மோசமான செயல்களை நன்மையான செயல்களாக மாற்றி உள்ளன என்பதற்கான விளக்கங்களும், உதாரணங்களும் இந்த புத்தகத்தில் மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகம் உளவியல் மற்றும் மேலாண்மை பற்றி அறிந்தவர்களும் அவைகளில் பயிற்சி அளிப்பவர்களும் படிக்க வேண்டிய புத்தகம்.

சார்லஸ் டுகிக் (Charles Duhigg) என்ற நூலாசிரியர் எழுதிய இந்த புத்தகம் நாம் எவ்வாறு பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம், எவ்வாறு பழகிய செயல்களை புறம் தள்ள முடியாமல் தவிக்கிறோம் என்பதை பற்றி எடுத்துக் கூறுகிறது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன்பு இருந்த மனநிலை வேறு. ஆனால் இந்த புத்தகம் படிக்க படிக்க விருப்பமான மற்றும் தன்னிலை மாற்றங்களை தெளித்துக் கொண்டே இருந்தது.

பழக்க வழக்கங்களை ஏன் ஏற்படுத்திக் கொள்கின்றோம், பழக்கங்கள் நம்மிடம் படிவதற்கு முக்கியமான காரணம் மனதளவில் சக்திகளை தேக்குகிறோம். தேக்கிய சக்தியை மறு பயன்பாட்டிற்கு செலவிடும் பொழுது எளிதில் வெற்றி அடைகின்றோம். மிகவும் குழப்பமான, கடினமான விஷயங்களைக்கூட காலப் போக்கில் பழக்கவழக்கங்களால் எளிமைப்படுத்துகிறோம். இந்த பழக்கங்கள் நல்லதாகவோ, கெட்டதாகவோ அல்லது நடுநிலையானதாகவோ இருக்கலாம். ஒரு முறை பழக்கத்தை ஏற்றுக் கொண்டால் அதன் பிறகு அந்த பழக்கம் நம்மை விட்டு நீங்குவதில்லை. மாறாக நமக்குள்ளேயே பதுங்கிக்கொண்டிருக்கிறது.

காலையில் அலாரம் அடிக்கிறது. எழுந்தவுடன் பல் துலக்கி, குளித்து, சிற்றுண்டி முடித்து குறித்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி எதையும் மறக்காமல் எடுத்துச் செல்வது என்பது ஒரு பழக்கம். இவ்வாறு இந்த எல்லா செயல்களும் சரியான முறையில் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய நிம்மதியும், சரியாக செய்தோம் என்ற நம்பிக்கையும் வெகுமதியாக நமக்கு கிடைக்கிறது. மீண்டும் மீண்டும் இவைகளை செய்யும் பொழுது அவை பழக்கங்களாக உருவாகி காலையில் எழந்தவுடன் பல் துலக்கி, குளித்து சிற்றுண்டியை உண்ண வேண்டும் என்ற கோர்வையை ஏற்படுத்துகிறது. ஆனால், இவை ஒவ்வொன்றும் தனித்தனி பழக்கங்கள் இவைகளை அடுத்து அடுத்து செய்வதால் சங்கிலி தொடர் போல அமைந்துவிட்டன.

பல் துலக்கும் பழக்கம் பற்றி மிகவும் ஆர்வமான பல கதைகள் உண்டு அவைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பொழுது எவ்வாறு நாம் கேள்வி கேட்காமல் பின்பற்றுகிறோம் என்ற தெளிவு கிடைக்கிறது. சென்ற நூற்றாண்டில் அதாவது சுமார் நூறு நூற்று பத்து ஆண்டுகளுக்கு முன்பாக பல் துலக்குவதை பற்றி யாரும் நினைவுபடுத்தவில்லை. பற்களை பேணி காக்க வேண்டும் என யாரும் கூறவில்லை. வாய் துர்நாற்றம், பற்களை சரிவர துலக்காததால் ஏற்படுவதாக யாரும் கூறவில்லை. ஆனால், பற்களில் ஏற்படும் கரைகளையும், படிமங்களையும் நீக்குவதற்கு பிரஷ்களை உபயோகிப்பது மிகவும் தேவையான ஒன்று என நினைவுபடுத்த ஆரம்பித்தார்கள்.

ஆதாயம் மிக்க துடிப்பான வணிகர்கள் இதை மிகப் பெரிய வியாபாரமாக மாற்றினார்கள். ஆனால், இதை எப்படி நடைமுறைப்படுத்துவது மறுபடியும், மறுபடியும் செய்ய துண்டுவது, இதனால் அவர்கள் பெறப்போகும் பயனோ அல்லது வெகுமதியோ என்ன? பல் துலக்க வேண்டும் என்ற நினைவுகளை எவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் செயல்படுத்துவது என்ற கேள்விகளுக்கு விடை தேடினர்.

அதற்கு விடையாக புதினா மணத்தில் பற்பசையை உருவாக்கி, அதைக் கொண்டு பற்களை தேய்த்தால் ஒரு வகையான புத்துணர்ச்சியும் சுத்தமான பற்களும் (வெகுமதி அல்லது பயனடைதல்) பெற முடியும் என்ற நினைவு கூறலை நேர் நிலைப் படுத்தினார்கள். வெறும் பற்களை மட்டும் தேய்ப்பதாக அல்லாமல் புதினா சுவையுடன் புத்துணர்ச்சியும், பற்களில் உள்ள படிமானங்கள் நீக்கப்பட்டதும் வெகு விரைவாக மக்களின் மனதில் ஒரு பழக்கத்தை ஏற்படுத்தியது.

மனித நினைவுகள் ஒரு மகத்தான சக்தியை பெற்று இருக்கிறது. திரும்ப ஆய்தலும், ஆழ்ந்து சிந்தித்தலும், தேர்ந்தெடுத்தலும் நம்முடைய பாரம்பரிய சாதனை. மனித நினைவுகளுக்கு மிகப்பெரிய பலமான நல்ல செயல்பாடுகள் உண்டு. நினைவில் நிற்காத, கடினமான குழப்பமான நடத்தைகளாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் பழக்கம் நம் வசப்படுகிறது. முடியவே முடியாது என்று நினைத்த கிட்டார் வாசிக்கும் திறமையோ, ஸ்மார்ட் போனை இயக்கும் விதமோ ஒரு வெளிநாட்டு மொழியை பேசுவதற்கோ ஆதார அடிப்படை திரும்ப திரும்ப பயிற்சி மேற்கொள்ளுவதே ஆகும்.

அதேபோல கெட்ட பழக்கங்களையும் எளிதில் பழக முடியும். அதிக புகைப்பிடித்தல், கழுத்து வரை உணவு உண்ணுவது போன்றவைகள் பழக்கத்தினால் மாறுதலுக்கு உட்படும். உயர் ரத்த அழுத்தம் உள்ள ஒருவர் கூறியதை போல என்னுடைய கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் நான் விட்டு விடுகிறேன் மாறாக உப்பை என்னிடம் இருந்து எடுத்து விடாதீர்கள் என்று கூறியது கவனிக்கதக்கது. உப்பை தின்றாலும் வேறு சில பழக்கங்களை விடுவது என்பது புதிய பழக்கங்களை பயிலுவது என்பது ஆகும். பழக்கங்கள் மாறும் என்றால் புதிய பழக்கங்கள் கூடும் என்று பொருள்.

பழக்கங்களை பற்றி அறிந்துக் கொள்ளும் போது அவை குழு நடத்தைகளையும், லாபகரமான குழுமங்களை பயன்பாட்டில் இருக்கச் செய்யவும், சமூக முனைப்புகளை வெற்றி அடையச் செய்யவும் பயன்படுகின்றன என்பது தெளிவாகும். ரிக் வாரன் (RICK WARREN) என்பவர் ஒரு சிறிய மதக்கூட்டத்தில் இருந்து மிகப் பெரிய தேவாலயங்களின் தலைவராக மாறுவதற்கு பழக்கங்களே காரணம் ஆனது. ரோசா பார்க்ஸ் (ROSA PARKS) என்பவர் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்ற புதிய பாணிக்கு வெற்றியை பரிசாக பெற்றார். ஆனால், அதுபோல செயல்பட நினைத்த பலரும் சரியான பழக்கங்களை கைக் கொள்ளாததால் தோல்வியை தழுவினர். 1987ல் லண்டன் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த 31 பேர்களும் மற்றவர்களின் பழக்கங்கள் கை கொடுக்காததால் உயிர் துறக்க நேர்ந்தது. நம்முடைய நடத்தை பழக்கமாவதற்கு அதை மீண்டும் மீண்டும் செய்து பழகவேண்டும்.

டோனி டுங்கி (TONY DUNGY) என்ற தேசிய கால்பந்து குழு பயிற்சியாளர் நினைத்தே பார்க்காமல் செய்யக்கூடிய சிறு சிறு நகர்வுகளை பயிற்றுவித்ததால் சிந்தனை செய்யாமல் பழக்கத்தின் காரணமாக மிக முக்கியமான சிக்கலான நேரங்களில் கோல்களை அடித்து வெற்றி அடைந்தனர். இங்கும் பழக்கமே பிரதானம் என்று நிறுவப்பட்டது. கெட்ட பழக்கங்களை வேறு சில நல்ல பழக்கங்களின் மூலமாக மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து மறக்கும் வாய்ப்பு உள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

குடிப்பழக்கத்திற்கும் புகை மற்றும் சூதாடும் பழங்கங்களுக்கும் குடும்பங்கள் பேரழிவை சந்தித்தன. ஆனாலும், மிகவும் கடினமான முயற்சியாலும் மாற்று பழக்கங்களாலும், ஆழ்ந்த சிகிச்சை மூலமும், சமுதாய ஆதரவு மூலமும் மீண்டவர்கள் பழக்கங்களை பற்றி பல கதைகள் சொல்லுவார்கள்.

சட்டங்களும், நடைமுறைகளும் நம்முடைய பழக்கங்களுக்கு காரணம் ஆகின்றன. 1984ல் 86% அமெரிக்கர்கள் சீட் பெல்ட் அணியவில்லை 2010ல் 85% சீட் பெல்ட் அணிய ஆரம்பித்தனர். சீட் பெல்ட்டை எப்படி போட்டுக்கொள்வது என்று தெரியாமல் யாரும் அணிந்து கொள்ளாமல் இல்லை. மாறாக, சட்டத்தின் மூலம் திருத்தங்களை ஏற்படுத்த மிக கடினமான தண்டனைகளை கையில் எடுத்ததால் காரில் பயணம் செய்தவர்கள் பெல்ட் அணிய ஆரம்பித்தனர்.

சரிவர படிக்காத ஈடுபாடு இல்லாத மாணவர்களை ஒன்று இணைத்து சேர்த்து இழுத்து நாம் ஒன்றானோம் என்ற உணர்வை ஏற்படுத்தும் பொழுது அவர்களுடைய செயல்திறன் அதிகரித்தும், மனநலன் மேம்பட்டும் ஒன்றானோம் என்ற எண்ணத்தை திரும்ப திரும்ப பெற்றதனால் வெற்றி அடைந்தார்கள்.

பழக்கத்தின் திறன் எந்தளவு மோசமான செயல்களை நன்மையான செயல்களாக மாற்றி உள்ளன என்பதற்கான விளக்கங்களும், உதாரணங்களும் இந்த புத்தகத்தில் மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகம் உளவியல் மற்றும் மேலாண்மை பற்றி அறிந்தவர்களும் அவைகளில் பயிற்சி அளிப்பவர்களும் படிக்க வேண்டிய புத்தகம். பொதுவான துறைகளில் விருப்பம் உள்ளவர்கள் சிறிது ஊன்றிப்படித்தல் அவசியம். கோட்பாடுகளையும் கருத்துக்களையும் எளிய முறையில் எடுத்துக் கூறிய இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம்.

rvenkatapathy@rediffmail.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in