‘கிரவுட் ஃபண்டிங்’ மூலம் நிதி திரட்ட புதிய வழிகாட்டு நெறிமுறை: செபி தலைவர் யுகே சின்ஹா தகவல்

‘கிரவுட் ஃபண்டிங்’ மூலம் நிதி திரட்ட புதிய வழிகாட்டு நெறிமுறை: செபி தலைவர் யுகே சின்ஹா தகவல்
Updated on
1 min read

பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியமான செபி இளம் தொழில் முனைவோர்கள் `கிரவுட் ஃபண் டிங்’ மூலம் நிதி திரட்டுவதற்காக விதிமுறைகள் விரைவில் வெளி யிடப்படும் என்று செபி தலைவர் யு.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதற்காக இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, `கிரவுட் ஃபண்டிங்’ மூலம் முதலீடுகளை உயர்த்துவதற்கு உண்டான வழிகள் கொண்ட அறிக்கையை இந்த மாதம் சமர்பிக்க உள்ளதாக சின்ஹா கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த விழா ஒன்றில் இதுபற்றி சின்ஹா மேலும் கூறியதாவது:

இந்தக் குழு கிரவுட் ஃபண்டிங் குறித்து விவாதித்து வருகிறது. இவர்கள் துணை கமிட்டி ஒன்றினை அமைத்திருக்கின்றனர். இந்த துணை கமிட்டி தனது அறிக்கையை தலைமைக் கமிட்டியிடம் சமர்பிக்க உள்ளது. இந்த கமிட்டி மிகவும் நேர்மையாகவும், துடிப்பான முறையிலும் வேலை செய்கிறது. இந்த மாதம் இறுதி அறிக்கை வந்துவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனை தொடர்ந்து இதனை நடைமுறைப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவோம்.

இ-காமர்ஸ் தளம் மூலம் மியூச்சுவல் பண்ட் விற்பனை செய்ய சாத்தியக்கூறுகளை உருவாக்க நடவடிக்கைகளை செய்து வருகிறோம் என்று கூறினார். மியூச்சுவல் பண்ட் துறையை ஊக்குவிப்பது குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் மற்றுமொரு நிறுவனரான நந்தன் நிலகேணி தலைமையில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் நந்தன் நில கேணியை சந்தித்து இதுகுறித்து விவாதிக்க இருக்கிறேன். அந்த குழுவின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

அம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் கடன் பத்திர விவகாரங்களில் இருந்து நாங்கள் நிறைய பாடம் கற்றிருக்கிறோம். இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இளம் முதலீட்டாளர்கள் மற்றும் சிறு குழுக்களைக் கொண்ட பிரிவினருக்கு முதலீடுகளை கிரவுட் ஃபண்டிங் முறையில் அதிகப்படுத்த நெறிமுறைகளை உருவாக்குவது பற்றி விவாதிப்பதற்கு பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியமான செபி தொழில்துறையின் கருத்தை கேட்டிருந்தது.

கிரவுட் ஃபண்டிங் என்பது இளம் தொழில் முனைவோர் மற்றும் சிறு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக தங்கள் நிறுவனத்துக்கு தேவையான நிதியை திரட்டுவதுவதாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in