

கணக்கில் காட்டப்படாத ரூ. 16 ஆயிரம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு வெளிக் கொண்டு வந்துள்ளதாக மத்திய வருவாய்த்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள் ளார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதத் திலிருந்து வருமான கணக்கில் காட்டப்படாத தொகையாகும் இது.
2014-15-ம் நிதி ஆண்டு மற்றும் நடப்பு நிதி ஆண்டில் (2015-16) நவம்பர் வரையான காலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது தவிர ரூ. 1,200 கோடி மதிப்பிலான சொத்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வருமான கணக்கில் காட்டா மல் மறைத்ததற்காக இதுவரை 774 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கணக்கில காட்டாத தொகையை அரசுக்குத் தெரிவிக்க அரசு 90 நாள் கால அவகாசம் அளித்தது. அப்போது ரூ. 4,160 கோடி தொகை கணக் கில் காட்டப்பட்டது. இதற்கு விதிக்கப்பட்ட ரூ. 2,500 கோடி அபராதத் தொகை இந்த மாத இறுதியில் வசூலாகும் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
கருப்புப் பண விவகாரத்தைக் கையாள்வதில் மத்திய அரசு மிகவும் உறுதியோடு உள்ளது. இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதம மந்திரி நரேந்திர மோடியும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் வெளிப்படுத்தியுள்ளனர்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக மத்திய அரசு (கணக் கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்து மற்றும் வருமானம்) தொடர்பான வரிச் சட்டம் 2015-ஐ அரசு கொண்டு வந்தது. இதில் கடுமையான விதிகளும் பதுக்கல்காரர்களுக்கு அதிகபட்ச அபராதத் தொகையும், சிறைத் தண்டனையும் அளிக்கும் விதி முறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் அது குறித்து அரசுக்குத் தெரிவிக்க ஒரு முறை அரசு வாய்ப்பு அளித்தது. இதன்படி 635 பேர் கணக்குகளை தாக்கல் செய்தனர். இதன்படி கணக்கில் காட்டப்பட்ட தொகை ரூ. 4,160 கோடியாகும். இதற்காக மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது இத்தொகை வெளியில் வந்தது.
இவ்விதம் கணக்கில் காட்டிய தொகைக்கான அபராதம் செலுத்துவற்கான கால அவகாசம் இந்த மாதம் 31-ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 2,500 கோடி வசூலாகும் என்று எதிர்பார்ப்பதாக ஆதியா குறிப்பிட்டார்.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலான பரிவர்த்தனைக்கு நிரந்தர கணக்கு எண் (பான்) அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முறைகேடான பரிவர்த்தனை நடைபெறுவது தடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த வகை யில் முழுமையான தகவல்கள் பிற நாடுகளிலிருந்து 2016-ல் கிடைக்கும் என்று ஆதியா குறிப்பிட்டார்.
மேலும் சர்வதேச அளவில் கருப்புப் பண விவகாரம் பெரும் பிரச்சினையாக பெரும்பாலான நாடுகளில் உருவெடுத்துள்ளது. இதனால் பெரும்பாலான நாடு களும் பண பரிவர்த்தனை தொடர் பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடு கணக்கு வரி சார்ந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிடமிருந்து தகவல்கள் கிடைக்கப் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.