

ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் இராக்கில் நிலவும் பதற்றம் காரணமாக வெள்ளிக்கிழமை மதியத்துக்கு பிறகு சரியத்தொடங்கின. வியாழன் மாலையில் தொழில் உற்பத்தி குறியீடு மற்றும் பணவீக்க தகவல்கள் வந்தன. இவை சாதகமாக வந்ததால் வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 110 புள்ளிகள் வரை ஏற்றத்துடன் வர்த்தகத்தை ஆரம்பித்தது.
வர்த்தகத்தின் இடையே 25688 புள்ளிகள் வரை சென்ற சென்செக்ஸ் முடியும்போது 348 புள்ளிகள் சரிந்து 25228 என்ற புள்ளியில் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் 107 புள்ளிகள் சரிந்து 7542 என்ற புள்ளியில் முடிவடைந்தது.
கடந்த ஜனவரி 27-ம் தேதிக்கு பிறகு ஒரே நாளில் பங்குச்சந்தைகள் அதிகளவு சரிவது இப்போதுதான்.
அமெரிக்க ராணுவம் இராக் மீது நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பதற்றம் காராணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 114 டாலருக்கு விற்பனை ஆனது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச விலையாகும். மேலும் முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்ததாலும் பங்குச் சந்தைகள் சரிந்தன.
முக்கிய குறியீடுகள் மட்டுமல்லாமல் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 2.5 சதவீதத்துக்கு மேல் சரிந்து முடிவடைந்தன.
இருந்தாலும் இந்த குறியீட்டில் இருக்கும் 400க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சபட்ச விலையை தொட்டன.
ஐ.டி. குறியீடு தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன.
குறிப்பாக ரியால்டி துறை குறியீடு 5 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. மெட்டல், வங்கி, கேபிடல் குட்ஸ் ஆகிய துறை குறியீடும் 2.5 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன.
கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. பி.பி.சி.எல்., ஹெச்.பி.சி.எல்., ஐ.ஓ.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 5 முதல் 8 சதவீதம் வரை சரிந்தன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வெள்ளிக்கிழமை கடுமையாக சரிந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 51 காசுகள் சரிந்து ஒரு டாலர் 59.76 ரூபாயாக இருந்தது. ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்தது.
சர்வதேச சந்தையில் ஏற்ற இறங்கங்கள் இருந்தது. ஆசிய சந்தையான நிக்கி, ஷாங்காய் காம்போசிட், ஹேங் செங் ஆகிய்வை உயர்ந்து முடிவடைந்தன. மாறாக ஐரோப்பிய சந்தைகளில் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.
சென்செக்ஸ் பங்குகளில் ஹெச்.யூ.எல்., இன்போசிஸ், எம் அண்ட் எம் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகிய பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றன. சென்செக்ஸில் ஹீரோ மோட்டோ கார்ப், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி. மற்றும் ஹிண்டால்கோ ஆகியவை கடுமையாக சரிந்த பங்குகள் ஆகும்.