தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் ரூ.300 கோடி: மொத்த வணிகம் ரூ.39,790 கோடி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் ரூ.300 கோடி: மொத்த வணிகம் ரூ.39,790 கோடி
Updated on
2 min read

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2013-14 நிதியாண்டில் ரூ.300.77 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. வங்கியின் மொத்த வணிகம் ரூ.39,790 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 1921-ல் தொடங்கப்பட்டது. தற்போது 373 கிளைகள், 686 ஏ.டி.எம். மையங்கள் மற்றும் 10 மண்டல அலுவலகங்களைக் கொண்டு, நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வருகிறது.

இவ்வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டத்தில், தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து வங்கி நிர்வாக இயக்குநர் கே.பி. நாகேந்திர மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:

2013-14 ஆம் நிதியாண்டில் வங்கி தனது மொத்த வணிகத்தில் 9.07 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து ரூ.39,790 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகையில் 11.98 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து ரூ.22,646 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களை பொறுத்தமட்டில் 5.46 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து ரூ.17,144 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.

நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை 15.60 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து ரூ.4,320 கோடியாக உள்ளது. ஒரு ஊழியரின் தனிநபர் வணிகம் ரூ.11.04 கோடியாக உள்ளது. ஒரு ஊழியர் சராசரி லாபம் ரூ. 8.35 லட்சமாக உள்ளது.

2013-14 நிதியாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.7441.95 கோடியில் இருந்து ரூ. 8528.71 கோடியாக உயர்ந்துள்ளது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித் துள்ள 40 சதவிகிதம் என்ற இலக்கைத் தாண்டி 49.75 சதவிகிதம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

2013-14 சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ. 3602.39 கோடியிலிருந்து ரூ. 5366.53 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 48.97 சதவிகிதம். 2013-14-ல் வட்டி வருமானம் ரூ. 2470.37 கோடியில் இருந்து ரூ. 2702.65 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 9.40 சதவிகிதம். மேலும், இதர வருமானம் ரூ.220.26 கோடியாக உள்ளது.

வங்கி வாடிக்கை யாளர்களுக்கு வழங்கிய வட்டியானது ரூ.1610.84 கோடியிலிருந்து ரூ.1820.48 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் செயல்பாடு செலவுகள் ரூ. 418.53 கோடியிலிருந்து ரூ. 489.26 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் செயல்பாட்டு லாபம் 31.03.2014 முடிவில் ரூ. 613.17 கோடியை அடைந்துள்ளது. வங்கியின் நிகர இலாபம் ரூ.300.77 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டில் வங்கி 50 புதிய கிளைகளைத் திறந்துள்ளது. 195 ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 2014-2015-ம் நிதியாண்டில் மேலும் 50 கிளைகள், 335 ஏ.டி.எம். மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்த வணிகத்தை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்தவும், மொத்த வைப்புத் தொகையை ரூ. 27,500 கோடியாக உயர்த்தவும், மொத்த கடன் வழங்கும் இலக்கை ரூ. 22,500 கோடியாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in