

டிராக்டர்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சோனாலிகா நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதி ஆண்டில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 526 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட டிராக்டர்களின் அளவைக் காட்டிலும் 41 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம், டிராக்டர் விற்பனையில் தனது சந்தை வாய்ப்பை சோனாலிகா அதிகரித்துக் கொண்டுள்ளது.
இதேபோல, கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் மற்றொரு வேளாண் உபகரணமான ரோட்டாவாட்டர் விற்பனை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் தீபக் மிட்டல் தெரிவித்துள்ளார்.
இதேபோல, 20 ஆயிரத்துக்கும் அதிகமான டிராக்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலத்திலும் வேளாண் துறை பாதிக்கப்படவில்லை என்பதற்கு டிராக்டர்கள் விற்பனை அதிகரிப்பு முக்கியச் சான்று என்று, நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
வேளாண் இயந்திரத் தளவாடங்களின் உற்பத்தியைப் பொறுத்தவரை, அரசு வெளியிட்ட பாதுகாப்பான உற்பத்தி வழிமுறைகளின் அனைத்து அம்சங்களையும் முழுமையாகப் பின்பற்றி 2 மாதங்களில் முழு உற்பத்தியை மீண்டும் எட்டிய நிறுவனம் சோனாலிகா என்பது குறிப்பிடத்தக்கது.