Last Updated : 16 Nov, 2015 08:44 PM

 

Published : 16 Nov 2015 08:44 PM
Last Updated : 16 Nov 2015 08:44 PM

பாபா ராம்தேவின் பதஞ்சலி நூடுல்ஸ் அறிமுகம்

யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி ஆயுர்வேத மருத்துவ நிறுவனம் நூடுல்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உடனடி உணவாக நூடுல்ஸ்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

நெஸ்லே நிறுவனத்தின் மாகி நூடுல்ஸ்களுக்குப் போட்டியாக பதஞ்சலி மையத்தின் ஆட்டா (கோதுமை மாவு) நூடுல்ஸ்களை பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்தியுள்ளார். நூடுல்ஸ் தேவையை பூர்த்தி செய்வதற்காக டெல்லி, மஹாராஷ்டிரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஓராண்டுக்குள் ஆலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் விற்பனையகங்களில் தங்களது தயாரிப்பு விற்பனை செய்யப்படும் என்று ராம்தேவ் தெரிவித்தார். முற்றிலும் கோதுமையில் தயாரிக்கப்பட்ட பதஞ்சலி நூடுல்ஸ் 70 கிராம் பாக்கெட் விலை ரூ. 15 ஆகும். இது மற்ற பிராண்ட் நூடுல்ஸ்களை விட விலை குறைந்தது.

இதே எடையுள்ள போட்டி நிறுவனங்களின் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் ரூ. 25-க்கு விற்கப்படுவதாக ராம்தேவ் கூறினார். தங்களது தயாரிப்புகள் அரிசி தவிட்டு எண்ணெயில் (ரைஸ் பிரான்) தயாரிக்கப்படுவதாகவும், பிற நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் பாம் ஆயில் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் நிறுவனம் குழந்தை நலன், தோல் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் காக்கும் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தங்களது தயாரிப்புகள் ரிலையன்ஸ் பிரெஷ், பிக் பஜார், டி மார்ட் மற்றும் பதஞ்சலி பிரத்யேக விற்பனையகங்களில் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

யோகாசன பயிற்சியின் போது பயன்படுத்தக் கூடிய ஆடைகளை இந்நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளதாக ராம்தேவ் கூறினார். இவை வஸ்திரம் பிராண்ட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவை தவிர குழந்தை நலன் காக்கும் மற்றும் சரும நலன் காக்கும் அழகு சாதனப் பொருள்களை தயாரிக்க உள்ளதாகவும் இவை டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று அவர் கூறினார்.

கடந்த நிதி ஆண்டில் (2014-15) தங்கள் நிறுவன வருமானம் ரூ. 2,007 கோடியாக இருந்தது என்றும் புதிய அறிமுகங்கள் மூலம் நடப்பாண்டில் வருமானம் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு உயரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

பதஞ்சலி நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடும் உத்தேசம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தற்போதைக்கு இல்லை என்றார்.

உள்நாட்டு தேவைகளை முன்னிறுத்தியே பொருள்கள் தயாரிக்கப்படுவதாகவும், ஏற்றுமதி வாய்ப்புகளை எதிர்காலத்தில் தங்கள் நிறுவனம் பரிசீலிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் பதஞ்சலி நூடுல்ஸ் விளம்பரங்கள் விரைவில் தொலைக்காட்சியில் வெளியாகும் என்றும் இதேபோல பிற தயாரிப்புகளின் விளம்பரங்களும் இடம் பெறும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x