ஜார்க்கண்ட் மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ரிலையன்ஸ் பவர்

ஜார்க்கண்ட் மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ரிலையன்ஸ் பவர்
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிறை வேற்றுவதாக ஒப்புக் கொண்ட 4 ஆயிரம் மெகாவாட் அதிநவீன மின்னுற்பத்தித் திட்டத்திலிருந்து அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வெளியேறியுள்ளது. இத்திட்டம் திலையா எனுமிடத்தில் நிறைவேற்றுவதாக இருந்தது.

2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்திட்டத்தை நிறை வேற்றுவதற்கான ஒப்பந்தப் பணியை ரிலையன்ஸ் பவர் மேற்கொண்டது. இத்திட்டத்துக்கான டெண்டரில் என்டிபிசி, லான்கோ இன்ஃபோடெக், ஜிண்டால் பவர், ஸ்டெர்லைட் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டன. இறுதியில் ரூ. 36 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணி ரிலையன்ஸ் பவர் வசம் வந்தது.

அனல் மின் நிலையம் மூலம் செயல்படும் இந்த மின்னுற்பத்தி நிறுவனத்துக்குத் தேவையான நிலக்கரியை அருகிலுள்ள கேரந்தாரி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்க அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.77 என்ற விலையில் வாங்கிக் கொள்ள 10 மாநிலங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டன.

இத்திட்டப் பணியை ரிலையன்ஸ் பவர் மேற்கொண்ட போதிலும் இந்த மின் நிலையத்துக்குத் தேவையான நிலத்தை அளிப்பதில் தாமதம் காட்டியது மாநில அரசு. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதத்தில் 470 ஏக்கர் வனப் பகுதியை ஒதுக்கியது. அடுத்து 1,220 ஏக்கர் நிலத்தை மாநில அரசு அளித்தது.

திட்டம் தாமதமாவதைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் பவர் வழக்கு தொடர்ந்தது. திலையா மின் திட்டத்துக்கு வங்கிகள் அளித்த ரூ. 800 கோடி உத்தரவாதத்துக்கு தடையாணை பிறப்பிக்க வேண்டும் என ரிலையன்ஸ் பவர் கோரியது.

இத்திட்டப் பணிக்கு மொத்தம் 17 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும் மாநில அரசின் மெத்தனமான செயல்பாடுகளால் இத்திட்டம் நிறைவேற 2023-24-ம் ஆண்டு ஆகும் என மதிப்பிட்டது. இதையடுத்து இத்திட்டத்திலிருந்து வெளியேற முடிவு செய்தது.

இந்த திட்டப் பணியிலிருந்து வெளியேறுவதற்கு மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்புக் கொண்ட பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக் கொண்டன. நீதிமன்றத்துக்கு வெளியே நடைபெற்ற சமரச தீர்வின் மூலம் இத்திட்டப் பணியிலிருந்து ரிலையன்ஸ் பவர் வெளியேறும் முடிவு எளிதாகியுள்ளது.

இத்திட்டப் பணியில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் செலவு செய்த தொகையில் ரூ. 114 கோடி கிடைக்கும். அத்துடன் ரூ. 800 கோடி வங்கி உத்திரவாதமும் கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in