தொடர்ந்து 6-வது மாதம்: மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்
Updated on
1 min read

கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.23 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகம் என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''2021, மார்ச் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1.23 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 6-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகி வருகிறது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சூழல் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீட்சி நிலையை நோக்கி வருவது தெளிவாகிறது. போலி பில்கள், பல்வேறு இடங்களில் புள்ளிவிவரங்களை ஆழமாக ஆய்வு செய்தல், வருமான வரித்துறை, சுங்கத்துறை இணைந்த திறமையான வரி வசூல் ஆகியவற்றால் கடந்த சில மாதங்களாக வரி வருவாய் அதிகரித்து வருகிறது.

மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூ.1 லட்சத்து 23 லட்சத்து 902 கோடி வசூலானது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ.22 ஆயிரத்து 973 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரியாக ரூ.29 ஆயிரத்து 329 கோடியும் வசூலானது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியாக ரூ.62 ஆயிரத்து 842 கோடியும் வசூலானது. செஸ் வரியாக ரூ.8 ஆயிரத்து 757 கோடி வசூலானது.

ஜிஎஸ்டி வரி 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபின், கடந்த மார்ச் மாதம் வசூலான தொகைதான் அதிகபட்சமாகும். கடந்த 5 மாதங்களாக ஜிஎஸ்டி வரி தொடர்ந்து ஒரு லட்சம் கோடியைக் கடந்து வருவது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவைதயே காட்டுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி வரியை விடக் கடந்த மாதம் வசூலான தொகை 27 சதவீதம் அதிகமாகும்".

இவ்வாறு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in