

நிலையான மத்திய அரசு அமைந்திருப்பது, முக்கியமான சீர்திருத்தங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்பது ஆகிய காரணங்களால் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 2015-16-ம் நிதி ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக டி.பி.எஸ் வங்கி கணித்திருக்கிறது.
இதற்கு முன்பு 2015-16-ம் நிதி ஆண்டில் 6.1 சதவீதமாக இருக்கும் என்று இந்த வங்கி கணித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் நடப்பு நிதி ஆண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று அந்த வங்கி கணித்திருக்கிறது.முதலீட்டுக்கு தேவையான அடிப்படை சூழ்நிலையை அரசு எடுத்து வருகிறது. இதற்கான சாதகமான விளைவுகள் 2016-ம் ஆண்டுதான் தெரியவரும் என்றும் அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.
தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் பங்குச்சந்தையில் நேரடியாக எதிரொலிக்கிறது. வரும் காலத்தில் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் லாபங்களில் இது எதிரொலிக்கும். மேலும் தொழில் உற்பத்தி குறியீட்டின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 3.4 சதவீதமாகவும், அடுத்த நிதி ஆண்டில் 5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நிதி ஆண்டுகளில் எதிர்மறை வளர்ச்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி துறையில் வளர்ச்சி ஏற்படும் போது அது பொருளாதாரத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மக்களின் வாங்கும் சக்தி, புதிய வேலை வாய்ப்புகள், தனியார் நுகர்வு மற்றும் செலவுகள் ஆகியவை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் பருவமழை முக்கியமான பங்கு வகிக்கும் என்றும், பருவ மழை குறையும் போது அது வளர்ச்சியை பாதிக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது. சராசரியை விட 7 சதவீதம் குறைவான மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
வானிலை மோசமாக இருந்து, பருவமழை குறையும் பட்சத்தில் நடப்பு நிதி ஆண்டில் 5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருக்கிறது டி.பி.எஸ் வங்கி.
6.75 சதவீத வளர்ச்சி: ஐ.எம்.எஃப்
வரும் நிதி ஆண்டுகளில் 6.75 முதல் 7 சதவீத வளர்ச்சியை இந்தியா அடைவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்தி ருக்கிறது. முதலீடுகள் தொடரும் போது வளர்ச்சி அதிகரிக்கும் என்று ஐ.எம்.எஃப்.-ன் தாமஸ் ரிச்சர்ட்சன் அசோசேம் நிகழ்ச்சியில் இதை தெரிவித்தார். இருப்பினும் உடனடியாக பெரிய வளர்ச்சி அல்லது இரட்டை இலக்க வளர்ச்சி சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரசுக்கு இன்னும் சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும், உடனடியாக பெரிய மாற்றம் நடக்காது. இன்னும் சில காலம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வளர்ச்சியை அதிகரிக்க நிதிப்பற்றாக்குறையை குறைப்பது அவசியம். பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்து சவாலான காரியமாக இருந்தாலும் செய்வது அவசியம் என்றார்.