

நெஸ்ட்லே நிறுவனத்தின் பாஸ்தாவும் பாதுகாப்பற்றது என்று உத்திர பிரதேசத்தின் உணவு பகுப்பாய்வு மையம் தெரிவித்துள்ளது. நெஸ்ட்லே பாஸ்தா-வின் மாதிரியை ஆய்வு செய்தபோது அனுமதிக்கப்பட்ட ரசாயனப் பொருட்களின் அளவை விட அதிகமாக இருந்ததாக மாநில அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நெஸ்ட்லே பாஸ்தா மாதிரிகளை நெஸ்ட்லே விநியோகஸ்தரிடம் பெற்று லக்னோவில் உள்ள தேசிய உணவு பகுப்பாய்வு ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது என்று இம் மாவட்ட உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி அர்விந்த் யாதவ் கூறினார்.
அங்கு பாஸ்தா மாதிரியை ஆய்வு செய்த போது அனுமதிக்கப்பட்ட அளவை விட ரசாயனப் பொருட்களின் அளவு (ஈயம்- லெட்) அதிகமாக இருந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவு 2.5 பிபிஎம். ஆனால் இந்த பாஸ்தாவில் 6 பிபிஎம் இருந்தது என ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து நெஸ்ட்லே நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அது திரும்பி வந்துள்ளதாகவும் யாதவ் கூறியுள்ளார்.
மேலும் உணவு பகுப்பாய்வு ஆய்வுக்கூடத்தின் அறிக்கையின்படி, இந்த பாஸ்தா உணவுப் பொருள் பாதுகாப்பற்ற உணவு வகையில் சேர்ந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.