

உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து பயன்பாட்டால் ஆண்டுக்கு 10,000 கோடி சேமிக்க முடியும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார். உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து மூலம் பொருட்கள் கையாளுவது மற்றும் பயணிகள் போக்குவரத்தை எளிதாக்க முடியும். நீர் வழிகளின் மூலம் நிலக்கரியை கொண்டு சென்றால் ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் சேமிக்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையையும் நிதின் கட்கரி கவனித்து வருகிறார். இந்தியாவில் உள்ள 111 ஆறுகளை தேசிய நீர்வழிப் பாதையாக மாற்றும் மத்திய திட்டம் நடப்பு குளிர்காலத்திலேயே அமல்படுத்தப்படும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
உள்நாட்டு நீர்வழி பாதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சரக்கு போக்குவரத்துக் கட்டணங்கள் கணிசமாகக் குறையும் என்றவர், பயணிகள் போக்குவரத்து மற்றும் பொருட்கள் கையாளுவதையும் ஊக்கப்படுத்த முடியும் என்றார். இந்த முக்கிய வளத்தின் மூலம் நிலக்கரி போக்குவரத்தையும் கையாண்டால் ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி வரை நாட்டுக்கு சேமிப்பாகும் என்றார்.
இந்திய தொழில் வர்த்தக சபையின் அமைப்பான பஞ்சாப் ஹரியாணா டெல்லி தொழில் வர்த்தக சங்கத்தின் (பிஹெச்டி சேம்பர்) ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதை குறிப்பிட்டார். நீர்வழி தடங்களில் சரக்கு போக்குவரத்தை மேற் கொண்டால் அது சுற்றுசூழலுக்கு உகந்ததாகவும், செலவு குறைந்த வழிமுறையாகவும் இருக்கும் என்றும் கூறினார்.
ஒரு ஹெச்பி பவர் சக்தி கொண்ட இன்ஜின் சாலையில் 150 கிலோ எடையை இழுக்கிறது என்றால், ரயிலில் 500 கிலோவும், நீர் வழி பாதையில் 4000 கிலோ எடையையும் இழுக்கிறது. அதுபோல ஒரு லிட்டர் எரிபொருளுக்கு சாலையில் 24 டன்/ ஒரு கிலோ மீட்டர் தூரம் என்றால் ரயிலில் 85/ ஒரு கிலோ மீட்டராக உள்ளது. இதுவே நீர்வழியில் 105 டன்/ ஒரு கிலோ மீட்டராக இருக்கும் என்றார்.
இந்தியாவில் உள்ள 111 ஆறுகளை நீர்வழி பாதைகளாக மாற்றும் சட்டத்துக்கு நாடாளு மன்றம் ஒப்புதல் அளிக்கும் என நம்புவதாகவும் கூறினார்.
ஏற்கெனவே நலிவடைந்த நிலையில் இருந்த துறைமுக துறையை பொறுத்தவரை தற்போதைய அரசாங்கம், துறைமுகங்களை கையாளுவதில் நேரடியாக தலையிட்டு அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது என்றார். இந்த துறைமுகங்கள் நடப்பாண்டில் 6,000 கோடி ரூபாய் லாபமீட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
உலர் துறைமுகங்கள் அமைக்க தொழில்துறையினர் பங்களிப்பு செலுத்த வேண்டும். இந்தியாவில் 14 மாநிலங்களில் இதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் அமைச்சர் கூறினார். இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் போக்குவரத்து செலவுகளை குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.