வீடியோகான் டெலிகாம் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்கியது ஐடியா
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா செல்லுலார், வீடியோகான் டெலிகாம் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் அலை வரிசையை கையகப்படுத்தி யுள்ளது. குஜராத் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிக்கான அலைவரி சையை ரூ.3,310 கோடிக்கு வாங்கியுள்ளது.
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வர்த்த கத்துக்கான புதிய கொள் கையை அறிவித்தது. அதற்கு பிறகு நடைபெறும் முதல் கையகப்படுத்தும் நடவடிக்கை இதுவாகும்.
இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை குறித்து ஐடியா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐடியா செல்லுலார் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை டிசம்பர் 2032 வரை பயன்படுத்தும். வீடியோகான் நிறுவனத்தின் இந்த உரிமை 2.5 மடங்கு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2012ல் நடந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான ஏலத்தில் வீடியோகான் நிறுவனம் இந்த இரண்டு சர்க்கிள் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக் காக ரூ.1,329 கோடி கொடுத்தது. குஜராத் சர்க்கிளுக்கு 900 கோடி ரூபாயும், உத்தர பிரதேச மேற்கு சர்க்கிளுக்கு 429 கோடியும் கொடுத்து வாங்கியது.
2015 ஆம் ஆண்டில் உள்ள ஸ்பெக்ட்ரம் மதிப்போடு 2012 ஸ்பெக்ட்ரம் மதிப்பை ஒப்பிட முடியாது என்று ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிமான்சு கபானியா கூறினார்.
இந்த இரண்டு சர்க்கிள்களிலும் 2ஜி மற்றும் 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உள்ளது. 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் நடைபெற்ற அலைவரிசைக்கான ஏலத்தில் 4ஜி அலைவரிசையை கையகப்படுத்தவில்லை என்றும் கபானியா தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு துறையின் ஒப்புதலுக்கு பிறகு, இந்திய அளவில் எங்களது எட்டு முக்கிய சர்க்கிள்களில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை வழங்கும் நிறுவனமாக இருப்போம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த இணைப்பின் மூலம் ஐடியா செல்லுலார் 4ஜி சேவைக்குள் அடியெடுத்து வைக்கிறது. வீடியோகான் நிறுவனத்தின் இந்த விற்பனை பகுதியளவிலானது. இந்த இரண்டு சர்க்கிளிலும் 20 லட்சம் வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
