

அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்நிய நேரடி முதலீடுகளில் சீர்திருத்தம் செய்வது என்பது வழக்கமான தொடர் நடவடிக்கை. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப இதை ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தற்போது 15 துறைகளில் முதலீட்டு வரம்பை தளர்த்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிஹார் தேர்தல் முடிவுகளால் இவ்விதம் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளனவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஒரே நாளில் இவ்விதம் விதிமுறைகளை வகுக்க முடியாது என்று பதிலளித்தார். எதை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோமோ அதை கடந்த ஒராண்டுகளாக செய்து வருகிறோம். இதற்கு எந்த ஒரு மாநில தேர்தலும் காரணமாக இருக்க முடியாது என்றார்.
வங்கித் துறை முதலீடுகளுக்கு பாஜக-வின் ஆதரவு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு இது தொடர்பாக அரசு எத்தகைய தரப்பினருடனும் பேச்சு நடத்த தயாராக உள்ளது என்றார். எந்த ஒரு தொழில்துறையையும், தொழிலாளர்களையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.