

வரும் பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய முதலீடு ஏதும் ஒதுக்கப்பட மாட்டாது என்று நிதிச்சேவை செயலாளர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார். எல்.ஐ.சி. நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தை முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இதை தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டில் எந்த ஒதுக்கீடும் கிடையாது. ஏதாவது அவசர தேவை என்றால் அரசாங்கம் எப்போதும் தயாராகவே இருக்கிறது என்று சாந்து தெரிவித்தார்.
இதற்கு முந்தைய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு 11,200 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
வாராக்கடன் சொத்துகளை விற்று அதன்மூலம் நிதி திரட்ட வேண்டிய அவசியம் இல்லை. இப்போதைக்கு எந்தெந்த வழிகளில் நிதி திரட்டலாம் என்று யோசித்து வருகிறோம் என்றார்.
ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனங்கள் இணைப்பு குறித்து கேட்டதற்கு, அரசாங்கம் சிறந்த வழியை ஆராய்ந்து வருகிறது. இதுகுறித்து காலக்கெடு எதுவும் சொல்ல முடியாது.
இதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன குறிப்பாக சட்டச்சிக்கல்கள் இருக்கின்றது. கொஞ்சகாலம் காத்திருக்க வேண்டும் என்றார்.
சமீபத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசாங்கத்தின் பங்கு 75 சதவிதமாக மூன்று ஆண்டுகளில் குறைக்க வேண்டும் என்பது குறித்து கேட்டதற்கு, இது குறித்து ஆராய்ந்து வருகிறோம், இப்போதைக்கு எதுவும் தெரிவிக்க இயலாது என்றார்.
எஸ்.பி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குநரை நியமிப்பது மற்றும் ரிசர்வ் வங்கியில் இரண்டு துணை கவர்னர்கள் நியமனத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது என்றார்.