

ஜப்பான் நாட்டை சேர்ந்த நிப்பான் லைப் நிறுவனம் ரிலையன்ஸ் லைப் நிறுவனத்தில் கூடுதலாக 23 சதவீத பங்குகளை வாங்கியது. இந்த பங்குகளின் மதிப்பு 2,265 கோடி ரூபாயாகும். இதன் மூலம் ரிலையன்ஸ் லைப் நிறுவனத்தில் நிப்பான் லைப் நிறுவனத்தின் பங்கு 49 சதவீதமாக உள்ளது.
ஜப்பான் நிறுவனத்தின் பங்கு 49 சதவீதமாக உயர்ந்துள்ளதால் நிறுவனத்தின் பெயர் ரிலையன்ஸ் நிப்பான் லைப் இன்ஷூரன்ஸ் என பெயர் மாற்றப்படுகிறது.
நிப்பான் நிறுவனம் முதலில் எங்களுடைய மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தது. இப்போது எங்களுடைய லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. எங்கள் இரு நிறுவனங்களுக்கு இடையேயான உறவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஏடிஏஜி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார்.
இந்த முதலீட்டுக்கு நிப்பான் லைப் இன்ஷூரன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த கால செயல்பாட்டினை மட்டும் வைத்து முதலீடு செய்யப் படவில்லை, இரு நிறுவ னங்களுக்கு இடையே உள்ள நல்ல உறவு காரணமாக தொடர்ந்து முதலீடு செய்கிறோம் என்று நிப்பான் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் யோஷினோபு ஸுட்சுய் தெரிவித்தார். கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 3,062 கோடி ரூபாய் முதலீடு செய்து 26 சதவீத பங்குகளை நிப்பான் வாங்கியது. அதேபோல ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை 3,303 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக உறுதி அளித்திருக்கிறது. மொத்தம் 8,630 கோடி ரூபாயை நிப்பான் நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்தில் முதலீடு செய்திருக்கிறது. நிதிச்சேவைகள் பிரிவில் அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை நிப்பான் செய்திருக்கிறது.
அவிவா அந்நிய முதலீடு
அவிவா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டுக்கு போட்டி ஒழுங்குமுறை அமைப்பான சிசிஐ ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அவிவா லைப் இன்ஷூரன்ஸ் என்பது அவிவா மற்றும் டாபர் இன்வெஸ்ட் கார்ப் ஆகிய நிறுவனங்களின் கூட்டாகும்.
இந்த நிறுவனத்தில் இங்கி லாந்தை சேர்ந்த அவிவா நிறுவனத்தின் பங்கு 26 சதவீதமாக உள்ளது. மேலும் 23 சதவீதம் உயர்த்த சிசிஐ ஒப்புதல் வழங்கி இருக்கிறது.