Published : 10 Mar 2021 05:32 PM
Last Updated : 10 Mar 2021 05:32 PM

அட்டைப் பெட்டி உற்பத்திக்கு பாதிப்பு; கிராப்ட் காகித ஏற்றுமதிக்குத் தடை வேண்டும்: மத்திய அரசுக்குக் கோரிக்கை

அட்டைப் பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதிலிருந்து காப்பாற்ற கிராப்ட் காகித ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐசிபிஎம்ஏ) மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

அட்டைப் பெட்டி உற்பத்திக்கு கிராப்ட் காகிதம் மிகவும் அவசியமானதாகும். ஆனால், கடந்த சில மாதங்களாக அதன் சப்ளை 50 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் அட்டைப் பெட்டி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், புதுவையில் அட்டைப் பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அட்டைப் பெட்டிகள் பரவலாக ஃபார்மா, அதிகம் விற்பனையாகும் நுகர்பொருள்கள் (எப்எம்சிஜி), உணவுப் பொருள், ஆட்டோமொபைல், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பேக்கிங் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இத்தகைய அட்டைப் பெட்டி தயாரிப்பில் 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு அட்டைப் பெட்டிக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில், தேவைக்கேற்ப அட்டைப் பெட்டிகளை உற்பத்தியாளர்களால் தயாரித்துத் தர முடியாத சூழல் நிலவுகிறது. இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிராப்ட் காகிதங்கள், துறைமுகங்களில் ஏற்றுமதிக்காகக் காத்திருக்கின்றன. இதனால் உள்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு கிராப்ட் காகிதம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. உள்நாட்டில் தேவை அதிகமானதால் இந்த கிராப்ட் காகிதத்தின் விலை 65 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் அட்டைப் பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் மூடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பாகத் தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்ஐசிபிஎம்ஏ) தலைவர் ஜி.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

''சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உற்பத்தித் துறையாக அட்டைப் பெட்டி உற்பத்தித் துறை திகழ்கிறது. இத்துறைக்குப் பிரதான மூலப்பொருளே கிராப்ட் காகிதம்தான். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,000 நிறுவனங்கள் அட்டைப் பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தொழில் நிறுவனங்களில் சுமார் 1,00,000 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 60 சதவீதம் பேர் மகளிராவர். அட்டைப் பெட்டி உற்பத்திச் செலவில் 85 சதவீதம் கிராப்ட் காகிதத்துக்கே செலவாகிறது. தற்போது இந்தக் காகிதத்தின் திடீர் விலையேற்றம், ஏற்றுமதி காரணமாக ஏற்பட்டுள்ளது. இதனால் அட்டைப் பெட்டிகளின் விலை 60 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.

போட்டிகள் நிறைந்த தொழில் துறைகளில் ஒன்றாகவும், பேக்கேஜிங் துறையில் மிகவும் அவசியமானதாகவும் இருந்தபோதிலும் மிகக் குறைந்த லாபத்திலேயே அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் செயல்படுகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் அட்டைப் பெட்டி விலை அதிகரிப்பைத் தாங்களே ஏற்கின்றன அல்லது சில நிறுவனங்கள் இதற்கான செலவை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துகின்றன.

இந்நிலையில் கிராப்ட் காகித ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதை உறுதி செய்தால் மட்டுமே பெரும்பாலான நிறுவனங்கள் தொடர்ந்து இத்தொழிலில் நீடிக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. கிராப்ட் காகித உற்பத்தியாளர்கள் மற்றும் அட்டைப் பெட்டிகளை வாங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மாட்டிக்கொண்டு பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அதிலும் பெரும்பாலான நிறுவனங்கள் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களாகும்''.

இவ்வாறு ஜி.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x