

மின் துறை சம்பந்தமான சீர்த்திருத்தங்கள் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தெரிவித்தார். உலக பொருளாதார அரங்கு மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது.
மின் துறை இப்போது கடும் நெருக்கடியில் இருக்கிறது. அதிகக் கடனில் இந்தத் துறை இருக்கிறது. இந்த பிரச்சினைகளை களைவதற்கு இன்னும் சில நாட்களில் முக்கியமான சில கொள்கை முடிவுகளை அறிவிக்க இருக்கிறோம். இந்த பிரச்சினை சரியான உடன் தனியார் நிறுவனங்களும் இந்த துறையில் பங்கேற்பார்கள்.
9 மின் விநியோக நிறுவனங்கள் 4.3 லட்சம் கோடி ரூபாய் கடனில் தவிக்கின்றன. இன்னும் சில நாட்களில் அமைச்சரவை கூடி முடிவெடுக்கப்படும். மாநில அரசுகள் மின் கட்டணத்தை படிப்படியாக உயர்த்த ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த துறையில் கட்டுமான அளவில் பிரச்சினைகள் இருக் கிறது. அதற்கான தீர்வு காணும் பாதையை நெருங்கிவிட்டோம். இப்போது இந்தியாவில் தேவையை விட அதிக மின்சாரம் உருவாகிறது. ஆனால் மின் சாரத்தை சரியான முறையில் விநியோகம் செய்ய மற்றும் வாங்குவதற்கு தயாராக இல்லை. இதனை சரி செய்ய மின் விநியோக நிறுவனங்களின் நிதிப்பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும். அவற்றை சரி செய்ய வில்லை என்றால் மொத்த மின் துறையும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். இந்த துறையின் அடிப்படை பிரச்சினைகளை நாம் நீண்ட காலமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த பிரச்சினைக்கு நாங்கள் முக்கியத் துவம் கொடுத்திருக்கிறோம் என்றார்.
சரியான நேரத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்படும். இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான தடைகள் நீடிக்காது. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருக்கும் இந்த மசோ தாவை நிறைவேற்ற காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவும் தயாராக இருக்கிறேன்.
இந்த மசோதா மாநிலங்களவை யில் நிறைவேறும்பட்சத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மசோதாவை உறுதி செய்யும். இந்த மசோதா நிறை வேறாமல் இருப்பதற்கு அந்த கொள்கையில் பிரச்சினை இல்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த மசோதா கிடப்பில் உள்ளது. இது வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில் நிச்சயம் வெற்றி அடையும். இன்னும் சில மாதங்களில் மாநிலங்களவையில் பெரும் மாற்றம் நடக்க இருக்கிறது. அப் போது இந்த மசோதாவை நிறை வேற்றுவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.
மறைமுக வரி வருமானம் அதிகமாக வந்திருப்பது சாதக மான அம்சமாகும். மறைமுக வரி வருமானத்தை உயர்த்த கடந்த நவம்பரில் இருந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தியது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தொழில் வளர்ச்சிக்கு நிலம் கிடைப்பதை எளிமையாக்க வேண் டும். அதே சமயத்தில் நிலம் எடுப்பவர்களுக்கு சரியான தொகையும், சரியான நிவாரணமும் கொடுக்க வேண்டும் என்றார்.