

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ஒரு லிட்டருக்கு 1.60 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 0.40 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மறைமுக வரி வருமானத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு இதனை செய்திருக்கிறது. இந்த வரி உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வு மூலம் சாதாரண பெட்ரோலுக்கு அடிப்படை உற்பத்தி வரி 5.46 ரூபாயில் இருந்து 7.06 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் மற்றும் சிறப்பு உற்பத்தி வரி ஆகியவற்றை சேர்க்கும் போது ஒரு லிட்டருக்கு 19.06 ரூபாய் உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.
அதேபோல சாதாரண டீசலுக்கு உற்பத்தி வரி 4.26 ரூபாயில் இருந்து 4.66 ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது. கூடுதல் மற்றும் சிறப்பு உற்பத்தி வரியை சேர்க்கும் போது ஒரு லிட்டருக்கு 10.66 ரூபாய் வரியாக விதிக்கப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டாக கச்சா எண்ணெய் விலை இறங்கு முகமாகவே இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி மறைமுக வரி வருமானத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. கடந்த நவம்பர் மற்றும் ஜனவரி இடையேயான காலகட்டத்தில் 4 முறை வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோ லுக்கு 7.75 ரூபாயும், டீசலுக்கு 6.50 ரூபாயும் அந்த இடைப்பட்ட காலத்தில் உயர்த்தப்பட்டது.
கடந்த நான்கு முறை உயர்த்திய போது மத்திய அரசுக்கு கூடுதலாக 20,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. கடந்த நவம்பர் 12, டிசம்பர் 2, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 16 ஆகிய நாட்களில் வரி உயர்த்தப்பட்டது. தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் இந்த வரி மூலமாக மத்திய அரசுக்கு கூடுதலாக 3,200 கோடி ரூபாய் கிடைக்கும்.
சேவை வரி உயர்வு
அனைத்து விதமான சேவைகளுக்கு வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் கூடுதலாக 0.50 சதவீதம் சேவை வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த கூடுதல் வரி மூலம் கிடைக்கும் தொகை தூய்மை இந்தியா திட்டத்துக்காக பயன்படுத்தப்படும். இந்த வரி உயர்வு மூலம் விமானம் பயணம், டிக்கெட் முன்பதிவு, தொலைத்தொடர்பு, உணவகம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு பொதுமக்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த கூடுதல் வரி மூலம் மீதமுள்ள மாதங்களில் மத்திய அரசுக்கு 400 கோடி ரூபாய் கிடைக்கும். தூய்மை இந்தியா வரி என்பது கூடுதல் வரி அல்ல என்று மத்திய நிதிமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக கடந்த ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் சேவை வரி மூலம் 2.09 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.