

தங்கத்தை பணமாக மாற்றும் அரசின் திட்டத்துக்காக கோயில் டிரஸ்டுகளில் பேச மத்திய அரசு முயற்சி செய்ய உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 5 ஆம் தேதி இந்த திட்டத்தை தொடக்கி வைத்தார். நாட்டில் சுமார் 20,000 டன் அளவுக்கான ஆபரண நகைகள் பயன்படுத்தப்படாமல் வீடுகளிலும் கோயில்களிலும் உள்ளன. இந்த தங்க நகைகளை பயன்படுத்தக்கூடிய அளவுக்கு மாற்றுவது என மத்திய அரசு முடிவெடுத்தது. தங்க கடன் பத்திரங்கள் மற்றும் தங்க காசுகளுக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இது குறித்து பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தங்கத்தை மிக அதிகமாக வைத்திருக்கும் சில குறிப்பிட்ட துறைகளை மையமாக வைத்து தங்கத்தை பணமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயில் டிரஸ்டுகள் மற்றும் இதர நிறுவனங்கள் நிதி சேமிப்பு என்கிற அடிப்படையில் தங்கத்தை சேமித்து வைத்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் அவற்றை வெளிக் கொண்டுவர முடியும் என்றார்.
இந்த திட்டத்தின் மூலம் பெறும் வருமானத்துக்கு மூலதன ஆதாய வரி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தோராயமாக 3,000 டன் ஆபரண நகைகள் இந்திய கோயில்களில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வீடுகளில் இருக்கும் தங்கம் இந்த திட்டத்தின் முக்கியமான இலக்கு அல்ல. கோயில் அறங்காவலர் குழு இதனை பரிசீலித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு சில காலம் ஆகலாம் என்று ஜெயந்த் சின்ஹா கூறினார்.