

நடப்பு நிதி ஆண்டில் (2020-21) சோனாலிகா டிராக்டர்ஸ் தயாரிப்பு நிறுனம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது. பிப்ரவரி மாதத்துடனான 11 மாத காலத்தில் மொத்தம் 1 லட்சத்து 6,432 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை 35 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி மாதத்தில் 11 ஆயிரத்து 821 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 9,650 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனத் தயாரிப்புகள் 130-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பங்களை கட்டுப்படியாகும் விலையில் விவசாயிகளுக்கு அளிப்பதே தங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
சோனாலிகா குழுமம் இந்திய வேளாண் பணிகள் விரைந்து இயந்திரமயமாக வேண்டும் என விரும்புவதோடு, அதன்மூலம் வேளாண் பணிகளில் முன்னேற்றத்தைக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், 20 முதல் 120 குதிரை சக்தித் திறன் வரை கொண்ட, கனரக டிராக்டர்கள் தற்போது ஹோசியாபூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
உயர்தொழில்நுட்பங்கள் மூலம் டிராக்டரின் பாகங்களை வடிவமைக்க தானியங்கி வசதியும், ரோபோ செயல்பாட்டின் வழி இயங்குவதான கட்டமைப்பும் இந்தத் தொழிற்சாலையில் உள்ளதாக அவர் கூறினார்.