முதலீடுகளை ஈர்க்கும் கொள்கை: அரசு உறுதி

முதலீடுகளை ஈர்க்கும் கொள்கை: அரசு உறுதி
Updated on
1 min read

வரி விதிப்புகளை எளிமையாக்குதல் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கை மாற்றம் ஆகியன அரசின் முன்னுரிமை பணிகள் என்று மத்தியில் புதிதாகப் பொறுப் பேற்றுள்ள பாஜக அரசு தெரிவித்துள்ளது.

இரு அவைகளும் இணைந்த நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அரசு செயல்படுத்த உள்ள திட்டப் பணிகளை பட்டியலிட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கணிக்கக்கூடிய அதேசமயம் வெளிப்படையான கொள்கைகளை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.

வரி விதிப்பு முறைகளில் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டு அவை மிகவும் எளிமையாக்கப்படும். முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான சூழல் உருவாக்கப்படும். தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையிலான சீர்திருத்தங்கள் செய்யப்படும். இந்த அரசு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான கொள்கைகளை வகுக்கும் என்று சுட்டிக் காட்டினார். குறிப்பாக அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கை வகுக்கப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். உற்பத்தித் துறையில் வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த அரசு ஆக்கப்பூர்வமான தொழிலாளர் நல உற்பத்திக் கொள்கையை வகுக்கும் என்றார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 5 சதவீதத்துக்கும் கீழாக உள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் மோசமான வளர்ச்சியாகும். 2012-13-ம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.5 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2013-14) இது 4.7 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது.

இந்த அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு அதிக பொருளாதார வளர்ச்சியை எட்ட பாடுபடும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது, வேலை வாய்ப்பைப் பெருக்குவது, உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது ஆகியன முக்கியமான பணிகளாக உள்ளன. அதை இந்த அரசு நிறைவேற்றும் என்றார்.

55 நிமிடம் உரை நிகழ்த்திய பிரணாப், இந்த அரசு சரக்கு சேவை வரி விதிப்பை (ஜிஎஸ்டி) கட்டாயம் அமல்படுத்தும். இந்த விஷயத்தில் மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in