Published : 01 Mar 2021 04:13 PM
Last Updated : 01 Mar 2021 04:13 PM

சிறு, குறு நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாக் கடன் ரூ.74 கோடியைத் திரட்டியது கினரா கேபிடல் 

கினரா கேபிடல் நிறுவனம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாத கடன் வழங்குவதற்காக ரூ.74 கோடியை, இண்டஸ்இண்ட் வங்கியிடமிருந்து திரட்டியுள்ளது. இத்தொகைக்கு, அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் (U.S. International Development Finance Corporation (DFC) 100 சதவீத உத்தரவாதத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்கு என 100 கோடி ரூபாயைப் பங்கு மூலதனமாகவும், கடனாகவும் திரட்ட கினரா கேபிடல் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, மேற்கண்ட நிதியைத் தற்போது திரட்டியுள்ளது.

மேலும், கினரா கேபிடல் நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக உள்ள கஜா கேபிடல், கவா கேபிடல், மைக்கேல் அண்ட் சூசன் டெல் பவுண்டேஷன் மற்றும் படாமர் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கு முதலீடாக ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதியை கினரா கேபிடல், இந்தியாவில் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள குறு, சிறு, நடுத்தர மூலதனம் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாக் கடனாக வழங்க உள்ளது.

கினரா கேபிடல் நிதி நிறுவனம், ஏற்கெனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களை, முறைசார்ந்த நிறுவனக் கடன் வலைக்குள் கொண்டு வர ரூ.2,000 கோடி வரை, சிறு வணிகக் கடன்களை எந்தவித அடமானமும் பெறாமல் (collateral-free) வழங்கியுள்ளது.

அமெரிக்க அரசின் ஒரு அங்கமான சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 100% உத்தரவாதத்துடன், இண்டஸ்இண்ட் வங்கி மூலம், கினரா கேபிடல் நிறுவனத்துக்கு இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்தொகையான 74 கோடி ரூபாயானது அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக வழங்கப்படும்.

"இந்தியாவில் நாங்கள் ஆர்வத்துடனும், உறுதியுடனும் இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதனால் சிறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தேவையான கடன் கிடைப்பதில் உள்ள சிரமங்களைச் சரி செய்து, அதை எளிமையாக்குது தற்போது சாத்தியமாகியுள்ளது" என்று கினரா கேபிடல் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹார்திகா ஷா தெரிவித்துள்ளார்.

கடன் பெறும் வாடிக்கையாளர்களை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர வழிக் கற்றல்முறை (Machine Learning) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், கினரா கேபிடல் நிதி நிறுவனம் தேர்வு செய்வதால், கடன் தொகைக்கான பிணை மற்றும் கடன் பெறும் நபரது தற்போதைய நிதிநிலை மற்றும் பொருளாதாரப் பின்னணி போன்ற ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமலேயே சரியான நபர்களை அல்லது தொழில்களைத் தேர்ந்தெடுத்து கடன் வழங்க முடிகிறது. கினரா கேபிடல் நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர் பட்டியலை ஆய்வு செய்தால், அதில் 90 சதவீதத்தினர் முதன்முறையாக வணிகக் கடன் பெறுபவர்களாக இருப்பது தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x