

ஜவுளி ஆலைகளுக்குத் தேவையான கருவிகளை தயாரிக்கும் கோவையைச் சேர்ந்த எல்எம் டபிள்யூ நிறுவனம் சீனாவில் புதிய ஆலையை அமைத்துள்ளது.
2.90 கோடி டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை இந்தியா மற்றும் சீன சந்தை யைக் குறிவைத்து தொடங்கப் பட்டுள்ளது என்று எல்எம்டபிள்யூ நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு தெரிவித்துள்ளார்.
இந்த ஆலை ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற ஆலை திறப்பு விழாவில் சீனாவின் உயர் அதிகாரிகள், ஷாங்காய்க்கான இந்திய தூதர் நவீன் வாத்ஸவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலகின் மொத்த ஜவுளி உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 50 சதவீதமாகும். மிக அதிக அளவு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடும் சீனாதான். இதைக் கருத்தில் கொண்டே ஜவுளி ஆலைக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் முன்னணி சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் ஆலை அமைத்துள்ளன.
இந்த வரிசையில் இப்போது எல்எம்டபிள்யூ நிறுவனமும் இடம்பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது. 8.5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய ஆலை கட்டப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் ஆர். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சீன அரசு வரிச்சலுகை அளிக்கிறது. இச்சலுகையைப் பெற தகுதி பெற்ற நிறுவனமாக எல்எம் டபிள்யூ திகழ்கிறது. சீனாவில் 20 வாடிக்கையாளர்கள் எல்எம் டபிள்யூ நிறுவனத்துக்கு உள்ளனர். இதுவரை 5 கோடி டாலர் அளவுக்கு ஆர்டர்கள் வந்துள்ளன என்று சீன ஆலையின் தலைவர் கே. சௌந்தர்ராஜன் தெரிவித்தார். இந்த ஆலையில் தற்போது 150 பேர் பணிபுரிகின்றனர்.