Published : 20 Nov 2015 09:23 AM
Last Updated : 20 Nov 2015 09:23 AM

வணிக நூலகம்: திறன் மேம்பாட்டு நுட்பங்கள்!

எந்தவொரு செயல்பாடும், அதன்மூலம் கிடைக்கும் வெற்றியும் முழுக்க முழுக்க நமது திறமையினை அடிப்படையாகக் கொண்டதே. திறமைகளின் வாயிலாக மட்டுமே நாம் நமது இலக்கிற்கான பயணத்தை தொடங்கவும், தொடரவும் முடியும். பாடுவதற்கான நல்ல குரல் வளத்திற்கோ அல்லது சிறந்த விளையாட்டு வீரராவதற்கோ அல்லது தொழிலில் மிகச்சிறந்த இடத்தை பெறுவதற்கோ எதுவாயினும் அதற்கான திறன் என்பது மிகவும் அவசியமான ஒன்று.

அவசியமான இந்த திறமையினை வளர்த்துக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் தேவையான வழிகளைச் சொல்கிறது “தி லிட்டில் புக் ஆப் டேலன்ட்” என்ற இந்த புத்தகம். எளிமையான, நடைமுறை சார்ந்த, நிரூபிக்கப்பட்ட யுக்திகளைக்கொண்டு அனைத்து விதமான திறனையும் மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதைக் கற்றுத்தருகிறார் இதன் ஆசிரியர்

‘‘டேனியல் கோயல்”. மேலும், நமது உண்மையான ஆற்றலை நாம் உணர்வதற்கான நுட்பங்களையும் கொண்டுள்ளது இந்த புத்தகம்.

எது தொடக்கம்?

திறமையானது எங்கிருந்து வருகின்றது? அல்லது எதிலிருந்து தொடங்குகின்றது? உருவாக்கி வளர்த்துக் கொள்ளக்கூடியதா? அல்லது மரபணு சார்ந்த பாரம்பரியமான ஒன்றா? இப்படி பல கேள்விகள் திறமையின் தொடக்கம் பற்றி இருக்கவே செய்கின்றது. மேலும், திறமையானது பரம்பரை பரம்பரையாக வருவதென்றும், அப்படி வருபவர்களே எளிதாக எவ்வித சிரமமும் இல்லாமல் சாதனைகளை செய்கின்றார்கள் என்ற எண்ணமும், மற்றவர்களுக்கு இந்த சாதனைகளெல்லாம் வெறும் கனவாகவே உள்ளது என்ற கருத்தும் உள்ளது. உண்மையில், இவை தவறான கருத்துக்கள் என்கிறார் ஆசிரியர். திறமையானது நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற மாபெரும் சக்தி என்றும், அது கண்டறியப்பட்டு மேம்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் சொல்கின்றார் ஆசிரியர்.

ஏன் முடியாது?

நமது திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தேவையான முதல்படி, அதற்காக நமது மனதை தயார்படுத்துவதே.

முடியும் என்ற எண்ணத்தை முடிந்தவரை மனதில் திடமாய் பதிய வேண்டியது முக்கியம். 1997 ஆம் ஆண்டு பெண்களுக்கான கோல்ப் விளையாட்டு போட்டிகளில், தெற்கு கொரியாவைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. ஆனால் இன்றோ, நாற்பதுக்கும் மேற்பட்ட தென் கொரிய வீராங்கனைகள், மொத்த கோல்ப் போட்டிகளில் மூன்றில் ஒரு பங்கில் வெற்றிபெற்று வருகின்றனர். என்ன நடந்தது? 1998 ஆம் ஆண்டு,

‘‘செரி பக்” என்பவர் இரண்டு முக்கியமான போட்டிகளில் வெற்றிபெற்று, அதன்மூலம் நூற்றுக்கணக்கான தென் கொரிய பெண்களை ஈர்ப்பதற்கு காரணமாக அமைந்தார்.

“நீங்கள் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள், அவரால் செய்ய முடிந்தது என்றால் என்னால் ஏன் முடியாது?” என்கிறார் மற்றொரு கோல்ப் வீராங்கனை “கிறிஸ்டினா கிம்”.

உண்மையில், ஏன் முடியாது? என்ற கேள்வி நமது ஏற்றத்திற்கான கேள்வி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

குறித்து வையுங்கள்!

தினசரி நமக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான அனுபவங்களிலிருந்து நாம் நமக்கு தேவையான தகவல்களை குறித்து வைத்துக்கொள்ள பழக வேண்டும். சிறப்பான வெற்றியை பெற்றவர்களில் அதிக சதவீதத்தினர் இந்த குறிப்பெடுக்கும் பழக்கத்தை தங்களுக்குள் கொண்டுள்ளனர் என்கிறார் ஆசிரியர்.

புகழ்பெற்ற டென்னிஸ் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் மற்றும் முன்னாள் பேஸ்பால் வீரர் கர்ட் சில்லிங் ஆகியோர் சிறிய குறிப்பேடுகளை பயன்படுத்துகின்றனர்.

அதுபோல, அமெரிக்காவின் மிகப் பிரபலமான ராப் இசைக் கலைஞரான எமினெம் மற்றும் அமெரிக்க நடன கலைஞரும் மிகச் சிறந்த நடன அமைப்பாளருமான ட்வைலா தார்ப் ஆகியோர் தங்களது காலணி பெட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வப்போது தோன்றும் கருத்துகளையும், யோசனைகளையும் சிறிய துண்டு சீட்டில் எழுதி அவற்றை அந்தப் பெட்டியினுள் போட்டுவைத்து விடுகின்றனர்.

இன்றைய நமது அனுபவங்கள் மற்றும் இன்றைய நாளின் முடிவுகள் ஆகியன நாளைய வாழ்விற்கான திட்டங்களாகவோ, அடுத்த வாரத்திற்கான இலக்காகவோ கூட இருக்கலாம். இந்த குறிப்புகளே நமது அடுத்தடுத்த பணிக்கான செயல்திறனை சரியான வழியில் வரையறுக்க உதவுகின்றன. மேலும், இந்த குறிப்புகள் என்பவை ஒரு வரைபடம் போன்றவை என்று கூறும் ஆசிரியர், இவையே நமக்கான தெளிவை உருவாக்குகின்றன என்கிறார்.

எவ்வளவு நேரம்?

இது இவ்வளவு நேரம், அது அவ்வளவு நேரம் என்பதெல்லாம் திறமையை வளர்க்கும் இடத்தில் கொஞ்சமும் செல்லுபடியாகாத விஷயங்கள் என்கிறார் ஆசிரியர். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆழமான பயிற்சிகள் என்பவை நிமிடங்களாலும் மணிகளாலும் அளவிடக்கூடியவை அல்ல. எத்தனை முறை திரும்ப திரும்ப பயிற்சி செய்தோம் மற்றும் எவ்வளவு உயர் தரமான இலக்கை அடைந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. பயிற்சியின் நேரத்தை அளவிடுவதற்கு பதிலாக அந்த செயல்பாட்டின் தரத்தை அளவிட வேண்டும் என்பதே ஆசிரியரின் வாதம்.

உதாரணமாக, நான் இருபது நிமிடங்களுக்கு பியானோவில் பயிற்சி செய்கிறேன் என்பதற்கு பதிலாக நான் புதிய பாடல் ஒன்றை தீவிரமாக ஐந்து முறை திரும்ப திரும்ப வாசிக்கப்போகிறேன் என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும். அதுபோலவே, ஒரு புத்தகத்தை படிப்பதற்காக எடுக்கின்றீர்கள். அதை சுமார் ஒரு மணி நேரம் படிக்கப்போகிறேன் என்பதைவிட அதில் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளப்போகிறேன் என்பதே சிறந்தது. எனவே இந்த கடிகார அளவீட்டை தூக்கி எறியுங்கள். அதற்குப் பதிலாக, அந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட உங்களது செயல்திறனை அளவீடு செய்ய கற்றுக்கொள்ளுங்கள். அது ஒரு நிமிடமோ அல்லது ஒரு மணி நேரமோ எதுவானாலும் அதில் நமது முன்னேற்றம் எவ்வளவு என்பதே முக்கியம்.

சிறியதாய் தொடங்குங்கள்!

சிறியதில் ஆரம்பித்து பெரியதாய் முடிப்பதே எந்த விஷயத்திலும் சிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் எடுங்கள் என்ற நல்ல அறிவுரையை நாம் அனைவருமே நமது சிறு வயதில் நம்முடைய பெற்றோரிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்தும் கேட்டிருப் போம் அல்லவா!. இந்த அறிவுரையே நமது மூளையின் கற்கும் திறனிலும் சரியாக பிரதிபலிக்கின்றது. எந்த விதமான திறனானாலும், அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து பிறகு நமது கற்றலை தொடங்க வேண்டும். சிறியதாய் தொடங்கும்போது, அது நமக்கு கற்றுக்கொள்ள எளியதாய் தோன்றும்.

ஒரு மொழியை கற்கும்போது முதலில் அதன் ஒவ்வொரு எழுத்துக்களையும் தனித்தனியாக பிரித்து அறிகிறோம். பிறகு எழுத்துகளை ஒன்றிணைத்து சிறு சிறு வார்த்தைகளை கற்கிறோம். அதன்பிறகு, வார்த்தைகளை இணைத்து வாக்கியத்தை அறிந்துக்கொள்கிறோம். தொடர்ச்சியாக வாக்கியங்கள் பத்திகளாகவும், பத்திகள் பக்கங் களாகவும் நீண்டு இறுதியில் முழுவதுமாய் கற்றுக்கொள்கிறோம்.

கற்கவேண்டிய ஒட்டுமொத்த திறனின் சிறு பகுதியை மட்டும் முதலில் கற்க ஆரம்பிக்கிறோம். அப்பொழுது குறிப்பிட்ட அந்த பகுதியை முழுவதுமாய் கற்று அறிந்த பிறகே, அத்திறனின் அடுத்த பகுதியை நோக்கி செல்ல வேண்டும். அப்படியே ஒன்றன்பின் ஒன்றாக அறிந்துக்கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். மேலும், இந்த செயலின் ஒரு பகுதியை கற்கும்போது அதன் முந்தைய பகுதியின் தொடர்ச்சியாகவே அதனை அறிந்துகொள்ள முயல வேண்டும்.

கொஞ்சம் கஷ்டப்படுங்க!

போராட்டம், ஏமாற்றம் மற்றும் தோல்வி ஆகியவை நமக்கு பிடிக்காத அல்லது தோதான விஷயங்களல்ல அல்லவா!. ஆனால் வாழ்வில் தோல்வியும் அவசியமான ஒன்றே என்கிறார் ஆசிரியர். நமது திறனை மேம்படுத்திக்கொள்ள தேவையான விஷயங்கள் போராட்டத்திலும் தோல்வியிலும் நிறையவே இருக்கின்றன. திறனை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில், தோல்வி கூட நமக்கு தேவையான காரணியாக மாறிவிடுகின்றது. தோல்வியடைவது வருத்தமல்ல, அந்த தோல்வியிலிருந்து மீண்டு வராமலிருப்பதே வருத்தமான செயல். தோல்வியின் சுவடுகளை அங்கேயே விட்டுவிட்டு, அதன் அனுபவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அடுத்த கட்ட செயல்பாட்டை நோக்கி பயணிக்க வேண்டும்.

திறனை மேம்படுத்த பல வழிகள் இருந்தாலும், அதன் மீதான நமது செயல்பாடே அவற்றின் உண்மையான மதிப்பை வெளிக்கொண்டுவருகிறது. ஆக கற்ற திறனை செயலாக்கி வெற்றியை நோக்கிய நமது பயணத்தை தொடங்குவோம்.

p.krishnakumar@jsb.ac.in



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x