

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த (யுஏஇ) எமிரேட்ஸ் என்பிடி வங்கியும் பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்பிஐ) கூட்டு சேர்ந்துள்ளன. இதன் மூலம் அமீரகத்தில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் சிரமமின்றி தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பணம் அனுப்ப முடியும்.
அமீரகத்தில் பணத்தை போட்ட 60 விநாடிகளில் அது இந்தியாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும்.
பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்திய தொழிலாளர்கள் அமீரகத்தில் உள்ள என்பிடி வங்கியில் பணத்தைப் போட முடியும். இதற்கென ``டைரக்ட் ரெமிட் பிளாட்பார்ம்’’ எனும் வசதி என்பிடி வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனுக்குடன் பணத்தை அனுப்ப முடியும் என்று என்பிடி வங்கியின் பிரிவின் மூத்த செயல் துணைத் தலைவர் சுவோ சர்கார் தெரிவித்துள்ளார்.
அமீரகத்தில் உள்ள வங்கிக் கிளைகள் மூலம் கட்டணமின்றி எஸ்பிஐ வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.
இதேபோன்ற ஒப்பந்தத்தை என்பிடி வங்கி ஐசிசிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கியுடன் ஏற்கெனவே செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
``ஐக்கிய அமீரகத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் வாடிக்கையாளர்கள் மிக விரைவாகவும், சுலபமாகவும் பண பரிவர்த்தனை செய்ய முடியும்,’’ என்று எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
இந்த வசதி மூலம் வீட்டுக் கடன், இன்சூரன்ஸ் பிரீமியம் இன்னும் பிற முதலீடுகளையும் வாடிக்கையாளர்கள் செய்ய முடியும்.