

தமிழகத்தில் இவரைப் பற்றி அறியாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொழிலதிபர், அரசியல்வாதி, டி.வி. சேனல் உரிமையாளர், சிறந்த பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். அவர் வசந்த் அண்ட் கோ உரிமையாளர் ஹெச். வசந்தகுமார் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமோ?
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கலாமா? வால்மார்ட் வரவால் உள்ளூர் தொழிலுக்கு ஆபத்தா? என பல்வேறு வகையான ஐயங்கள் வர்த்தகர்களிடம் எழுந்துள்ள நிலையில் சங்கிலித் தொடர் நிறுவனங்களை கடந்த 36 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் இவரது கருத்து தொழில்துறையினரின் கருத்தாக அமையும். மேலும் அரசியல்வாதியாக இருப்பதால் சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் இவருக்கு இருக்கும் என்பதாலேயே இவரது கருத்துகளை அறிய தொடர்பு கொண்டோம். வெற்றி பெற்றவர்களே தேர்தலுக்குப் பிறகு தொகுதிப் பக்கம் தலைகாட்டாத நிலையில், தொடர்ந்து தொகுதி பக்கம் சென்று மக்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை இவர் செய்து வருகிறார். சென்னை திரும்பிய சமயம் தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டியிலிருந்து…
வீட்டு உபயோகப் பொருள் விற்பனையில் இப்போது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
ஒரு விற்பனையகமாகத் தொடங்கி இன்று 57 விற்பனை யகங்கள் உள்ளன. இத்தொழிலில் தன்னிறைவை அடைந்துவிட்ட நிம்மதி எனக்குக் கிடைத்துள்ளது. நேர்மையான வியாபாரி என்ற பெயரெடுத்துவிட்டேன். முன்பு விஜிபி, செல்லமணி அண்ட் கோ, ஸ்டாண்டர்ட் எலெக்ட்ரிக் கம்பெனி என வெகு சில நிறுவனங்களே விற்பனையகங்களை வைத் திருந்தன. ஆனால் இப்போது பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களே பிரத்யேக விற்பனையகங்களைத் தொடங்கி விட்டன.
இவை தவிர, டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் சங்கிலித் தொடர் நிறுவனங்களை அமைத்து போட்டியை அதிகரிக்கச் செய்துவிட்டன.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆன் லைன் மூலமான வர்த்தகம்தான் எங்களுக்குப் பெரும் சவால்.
இத்தகைய சவாலை எதிர்கொள்ள எத்தகைய உத்திகளை வகுக்கிறீர்கள்?
மக்களிடையிலான நேரடி யான தொடர்புதான் வியாபா ரத்துக்கு அடித்தளம். இந்தக் கடையில் பொருள் வாங்கி னால், பழுது ஏற்பட்டாலும் நேரடியாக அணுகலாம் என்ற மனோபாவத்தை மக்களிடையே தோற்றுவித்துவிட்டோம். இதைத் தவிர, மக்களிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ள பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பதை பல முறை சுட்டிக்காட்டி விட்டேன். ஆனால் அதற்கு இதுவரை யாரும் தீர்வு காணவில்லை.
வருவாயைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், ஆன் லைன் வர்த்தகத்தால் எப்படி வருவாய் இழப்பு ஏற்படும்?
ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஏதாவது ஓரிடத்தில் குடோன் எடுத்து அங்கிருந்து பொருள் களை கூரியர் மூலம் அனுப்பி விடுகின்றனர். இதனால் ஆன்லைன் நிறுவனம் செயல்படும் மாநிலத்துக்கு மட்டுமே வரி கிடைக்கும். அந்தப் பொருள் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டாலும் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் கிடைக்காமல் போகும்.
இதனால் எவ்வளவு இழப்பு இருக்கும் என்று கூற முடியுமா?
இதுவரை கணக்கெடுப்பு ஏதும் நடத்தவில்லை. தமிழகத்தில் ஆன்லைன் மூலமான வர்த்தகம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடைபெறுகிறது என்று வைத்துக் கொண்டால் மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய 14.5 சதவீத வரி வருவாய் (ரூ. 145 கோடி) கிடைக்காமல் போகிறது.
இதைத் தடுக்க என்ன வழி?
ஒருமுனை வரி விதிப்பு முறைதான் இதற்குத் தீர்வு. அந்த வகையில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்புதான் தீர்வு. அதை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும்.
இந்தத் தொழிலை விரிவுபடுத்த அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
வீட்டு உபயோகப் பொருள் விற்பனையைப் பொறுத்தமட்டில் டி.வி.யை பொதுவாக 10 ஆண்டுகள் வரை மக்கள் உபயோகிக்கின்றனர். ரெப்ரிஜிரேட்டரின் ஆயுள் காலம் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை உள்ளது. இதனால் ஒரு வாடிக்கையாளர் மீண்டும் எங்களிடம் திரும்பிவருவதற்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. வட மாநிலங்களுக்கு விரிவுபடுத்தலாம் என்ற நோக்கில் கேரளம், பெங்களூரில் விற்பனையகம் தொடங்கினோம். அதற்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மொபைல் விற்பனையகம் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கெனவே மொபைல் விற்பனையில் பலர் ஈடுபட்டுள்ளனரே?
வசந்த் அண்ட் கோ வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றையும் எங்களிடமே வாங்க வருவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. மேலும் செல்போன் விற்பனையகம் அமைக்க குறைந்த அளவு, குறைவான முதலீடே போது போதுமானது.
வேறெந்த தொழிலில் இறங்கும் திட்டமுள்ளது?
பிரபல நிறுவனங்களின் பிராண்டட் ஆயத்த ஆடைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். நாகர்கோவிலில் உள்ள விற்பனையகத்தில் இதை முதலில் தொடங்க உள்ளோம்.
டி.வி. சேனல் தொடங்கியதற்கான காரணம் என்ன?
காங்கிரஸ் கட்சிக்கென தனி டி.வி. சேனல் கிடையாது. சொந்தப் பணத்தில் தொடங்கி நடத்தி வருகிறோம். லாபகரமாக இல்லாவிட்டாலும் ஆத்ம திருப்திக்காக நடத்துகிறோம். 24 மணி நேர செய்தி சேனல் தொடங்கும் திட்டமும் உள்ளது.
டி.வி. சேனல் மூலம் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு இயங்கங்களையும் நடத்தி வருகிறோம். குறிப்பாக மின்சாரம் சேமிப்பு, வாரத்தில் ஒரு நாள் காரை தவிர்ப்பது உள்ளிட்டவை.
இதை செயல்படுத்தும்விதமாக வாரத்தில் ஒரு நாள் கார் உபயோகிப்பதை தவிர்க்கிறேன்.
வியாபாரத்தில் தன்னிறைவை எட்டிவிட்டதாகக் கூறும் நீங்கள் அரசியலில் எந்த நிலையை எட்டியுள்ளீர்கள்?
மக்களின் நம்பகத்தன்மையை வியாபாரத்தில் பெற்றுவிட்டேன். அரசியலிலும் இவர் நேர்மை யானவர் என்பதை 75 சதவீத மக்கள் நம்புகின்றனர். எஞ்சிய 25 சதவீத மக்களிடையேயும் எனது நம்பகத்தன்மை சென்றடைய வேண்டும் என்பதே விருப்பம்.
உங்கள் அரசியல் பயணம் எப்படி இருக்கிறது?
சட்டப் பேரவை உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் தொகுதி மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அடுத்து நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
உரிய அங்கீகாரம், அதிகாரத்துடன் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே லட்சியம். அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
ramesh.m@thehindutamil.co.in